
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிமுக நிர்வாகிகளுடன் சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மைப் பணி திட்டத்தை துவக்கி வைத்தார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வன்முறை தலை தூக்கிய பிறகு தான் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது என விளக்கி சொல்லப்பட்டுள்ளது. நடந்த சம்பவத்திற்கு அரசு அதிகாரிகள், காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது சரியான முன்னுதாரணமாக அமையாது. ஏனென்றால் இனி வரும் காலங்களில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தாத அச்சமான நிலையை மக்கள் விவாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்” எனக் கூறினார்.
மேலும் அதிமுக சார்பில் பயிற்சி முகாம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி.உதயகுமார், “கல்லூரி வளாகத்தில் ரவுடிகள் செய்யும் செயல்கள் வீடியோ காட்சிகளாக வந்தது. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் நெஞ்சம் இதனைக் கண்டு பதை பதைக்கிறது. உடனடியாக தமிழக அரசு இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
ஆளுநர் பதவியை பொறுத்தவரை அவரை நியமிப்பது ஜனாதிபதி தான். ஜனாதிபதி தான் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கருத்துக்களை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்” எனக் கூறினார்.