“ரசிகர்களின் செயல்களை நடிகர்கள் கண்டிக்க வேண்டும் அவர்கள் அப்படி செய்யாத பொழுது நாம் என்ன செய்வது” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தேவக்கோட்டையில் கல்லூரி விழா ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பொழுதுபோக்குகளிலும் கேளிக்கைகளிலும் அதிக நாட்டம் கொண்ட மக்களைப் போராடவும் புரட்சி செய்யவும் தயார் செய்ய முடியாது. மற்ற மாநிலங்களைப் பார்த்தாவது நம் கற்றுக்கொள்ள வேண்டும். கேரளாவிலும் ஆந்திராவிலும் படம் வெளியாகிறது. தமிழகம் போல் எங்கேயும் கொண்டாட மாட்டார்கள்.
பதாகைகளுக்கு பாலூற்றுவது. கோவில்களில் பறவை காவடி எடுப்பது போல் முதுகில் குத்திக்கொண்டு அதில் தொங்கிக்கொண்டு ஒருவர் பதாகைக்கு மாலை போடுகிறார். அதைப் பார்க்கும் பொழுது நமக்கு பகீர் என்று இருக்கிறது. லாரியிலிருந்து நடனமாடும் பொழுது கீழே விழுந்து ஒருவர் இறந்துவிட்டார். படம் பார்க்க வேண்டும். கைதட்ட வேண்டும். காசு கொடுக்க வேண்டும். அதோடு வந்து விட வேண்டும். இதை நடிகர்கள் தான் கண்டிக்க வேண்டும். அவர்கள் கண்டிக்கமாட்டேன் என்கிறார்களே. நாம் என்ன செய்வது சொல்லுங்கள். நமது பிள்ளைகளும் திரைக் கவர்ச்சி மயக்கத்தில் இருக்கிறார்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட வேண்டும்” என்றார்.