Skip to main content

“மோடி இல்லை என்றால் தி.மு.க ஆட்சிக்கு வந்திருக்க முடியாது” - சீமான்

Published on 24/10/2023 | Edited on 24/10/2023

 

seeman criticize bjp and dmk

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் இன்று (24-10-23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கள்ளக்குறிச்சிக்கு வந்தார். இந்தக் கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

 

அப்போது அவர், “நீட்டை கொண்டு வந்ததே திமுகவும் காங்கிரஸும் தான். ஆனால், இப்போது நாடகமாடுகிறார்கள். திமுகவின் ஒப்புதல் இல்லாமல் நீட்டை கொண்டு வந்திருக்க முடியுமா? மின் கட்டணத்தைத் தாறுமாறாக உயர்த்தி இருக்கிறார்கள். இதனால், வறுமையில் இருக்கும் மக்களுக்கும் கூட ஆயிரக் கணக்கில் மின் கட்டணம் வருகிறது. இதை எல்லாம் எப்படி ஏற்க முடியும்.

 

மோடி, மோடி என்று கூறியே தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது. மோடி இல்லை என்றால் திமுகவால் ஆட்சிக்கே வந்திருக்க முடியாது. இதனால், மோடிக்கு தி.மு.க தான் நன்றி சொல்ல வேண்டும். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், நீட்டை ஒழிக்க இவர்கள் எதையும் செய்யவில்லை. போராட்டம் கூட நடத்தவில்லை. இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது தேர்தல் நாடகம் தான். 

 

பா.ஜ.க.வால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன் போன்றோர்களில் ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடியுமா? அப்படி அறிவித்தால், கொள்கை கோட்பாடுகளைத் தூக்கி எறிந்துவிட்டு நாங்கள் அவர்களுக்கு ஆதரவு தருகிறோம். தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை. தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று நாங்களே ஆதரிப்போம். தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் பா.ஜ.க.வுக்கு அக்கறை இல்லை” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்