திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பாக ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர், "முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு தெம்பில்லாமல் - திராணியில்லாமல், என்னுடைய கேள்விகளுக்கு தொடர்பில்லாமல் “பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு என்ன விலை?” என்ற பழமொழிக்கேற்பவும் - “பந்தை உதைப்பதற்கு பதிலாக, ஆளை உதைப்பதாக” சம்பந்தா சம்பந்தமில்லாமல் - பொறுப்பற்ற தன்மையில் - ஆதாரமில்லாமல் - வாய்க்கு வந்தபடி அறிக்கை என்ற பெயரில் உளறிக் கொட்டியிருக்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும், நாங்கள் நீதிமன்றத்தின் மூலம் தவிடுபொடியாக்கியிருக்கிறோம் என்ற வரலாற்றை ஏனோ ஜெயக்குமார் மூடி மறைக்க முயற்சிக்கிறார்.
முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட கழக முன்னோடிகள்மீதும், என்மீதும் போடப்பட்ட அத்தனை வழக்குகளிலும் நீதிமன்றங்களில் வாதாடி குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பை பெற்றிருக்கிறோம்.
ஆனால், உங்கள் நிலை அப்படியா? அவரது தலைவியிலிருந்து அத்தனை பேரும் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்றிருப்பதோடு, ஜெயக்குமார் போன்ற பலரின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற உள்ளார்கள்.
ஜெயக்குமார், என்னை பற்றி அவதூறாக ஒரு குற்றச்சாட்டை சுமத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதற்கு விளக்கம் அளிப்பது எனது கடமை.
2001ஆம் ஆண்டு வரை நான் நங்கநல்லூர் வீடு கட்டும் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தபோது, என்மீது புகார் வந்ததாக கூறுகிறார். கடந்த கால வரலாற்றை ஜெயக்குமாருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 2001ஆம் ஆண்டு இவரது தலைவி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, நங்கநல்லூர் வீடு கட்டும் கூட்டுறவு சங்கம் மற்றும் நான்கு முறை நகராட்சித் தலைவராக இருந்த ஆலந்தூர் நகராட்சியில் கோப்புகளை துருவி துருவி தேடிப் பார்த்தார். இதற்கு காரணமே, ஜெயலலிதாமீது நான் டான்சி வழக்கு தொடுத்ததுதான். நான் ஊழல் செய்ததாக எந்த அடிப்படை ஆதாரமும் கிடைக்காத காரணத்தால், சென்னை மாநகராட்சியின் மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்து வந்த துணைவியாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டுமென்று, அன்றைக்கு மாநகராட்சி ஆணையராக இருந்த விஜயகுமாரை, முதலமைச்சர் ஜெயலலிதா அவரது இல்லமான போயஸ் கார்டனுக்கு அழைத்து, நேரடியாகவே விஜயகுமாரிடத்தில், “எட்டாண்டு காலமாக, ஆர்.எஸ்.பாரதி என் தூக்கத்தை கலைத்தார். எனவே, அவருக்கும் அதே நிலை உருவாக்க வேண்டும்” என்று சொல்லி, விஜயகுமாருக்கு ஆணையிட்டதாக, விஜயகுமாரே என்னை அழைத்து, ஜெயலலிதா சொன்ன செய்தியை என்னிடம் சொன்னார். அப்பொழுது என்னுடன் இன்றைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியமும் - அன்றைய மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பெ.வீ.கல்யாணசுந்தரமும் உடனிருந்தனர். நான் சிரித்துக் கொண்டே “என் தூக்கத்தை யாராலும் கலைக்க முடியாது” என்பதை அந்த அம்மையாரிடம் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அதில் என்ன வேடிக்கை என்னவென்றால், எனது டாக்டர் மனைவிக்கு மாநகராட்சியின் சார்பில், “சிறந்த மருத்துவர்” என்ற அவார்டு கொடுத்த ஒரு வாரத்திற்குள், அவரை பணி நீக்கம் செய்து உத்தரவு அளிக்கப்பட்டது. அதற்காக நான் வருத்தப்படவில்லை.
இப்பணி நீக்கம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வெற்றி பெற்றேன். இச்செய்தி உண்மையா, இல்லையா என்பதை ஜெயக்குமார் மாநகராட்சியிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
ஏறத்தாழ 12 ஆண்டுகள், அதற்குப் பிறகு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால், எந்த ஒரு வழக்குகூட போட முடியவில்லை. ஜெயலலிதாவைவிட, இன்றைக்கு அ.தி.மு.க.வில் உள்ள ஜெயக்குமார் உள்ளிட்ட எந்தவொரு முன்னணித் தலைவர்களும் பெரிய அறிவாளிகள் இல்லை. அதைபோலத்தான், நங்கநல்லூர் வீடு கட்டும் கூட்டுறவு சங்கத் தலைவராக நான் இருந்தபோது, என்மீது எவ்வித கையாடல் வழக்கும் இல்லை. அப்படி இருந்திருந்தால், இவரது தலைவி ஜெயலலிதா என்னை விட்டு வைத்திருப்பாரா? இந்த சராசரி அறிவுகூட ஜெயக்குமாருக்கு இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது.
எடப்பாடி மீது சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. சார்பில் நான் தொடர்ந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். அதேபோல, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தேன் என்பதற்காக, என்னை பழிவாங்கும் நோக்கத்தோடு, கொடிய கொரோனா தொற்று தலைவிரித்தாடிய நேரத்தில், ஈவு இரக்கமின்றி, என்னை அதிகாலையில் கைது செய்து, என்னை எந்த சிறையில் அடைக்க வேண்டும் என்று முன்னரே முடிவெடுத்து, ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த பூந்தமல்லி சப்-ஜெயிலில், தனிமையில் அடைத்து வைத்து, கொடுமைப்படுத்த வேண்டும் என்று ஜெயக்குமார் குழு திட்டமிட்டது.
ஆனால், தி.மு.க.வின் பலம் வாய்ந்த சட்டத்துறை வழக்கறிஞர்களின் வாதத் திறமையால், ஒரு மணி நேரத்தில் நான் வெளியே வந்துவிட்டேன். இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், எனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை, ரத்து செய்ய வேண்டும் என்று அரசின் பணத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடியது ஜெயக்குமார் குழு. ஆனால், அவைகள் எல்லாம் தவிடுபொடியாக்கப்பட்டு, என்மீது போடப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது என்ற உண்மையை ஜெயக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும்.
உப்பை தின்ற இவரும், இவரது சகாக்களும்தான் தண்ணி குடிக்க வேண்டும். ஏற்கனவே ஒரு வழக்கில் ஒரளவுக்குத்தான் தண்ணீர் குடித்துவிட்டு வந்திருக்கிறார் ஜெயக்குமார். ஆனால், மிக விரைவில் வாக்கி டாக்கி போன்ற வழக்குகளில் நிரந்தரமாக தண்ணிக் குடித்திட ஜெயக்குமார் தயாராக இருக்க வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி.