எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் எனும் சிவ சிதம்பர இராமசாமி படையாட்சி இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக நீதி போராளியும் ஆவார். 1951-ல் ‘வன்னிய குல சத்திரிய சங்கம்’ மாநாட்டைக் கூட்டி வன்னியர்களுக்காக மாநிலந்தழுவிய கட்சியினை உருவாக்க முயன்றார். ஆனால் தலைவர்களுக்குள் இருந்த வேறுபாட்டால் அம்முயற்சி வெற்றி பெறவில்லை. மாறாக வட ஆற்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்த எம்.ஏ.மாணிக்கவேலு நாயக்கர் ‘காமன்வீல் கட்சி’யினை தொடங்கினார். தென்னாற்காடு மற்றும் சேலம் மாவட்ட வன்னியர்கள் இராமசாமி படையாட்சியின் தலைமையில் ‘தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி’ என்ற மற்றொரு கட்சியைத் தொடங்கினர்.
இரு கட்சிகளும் 1952 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) ஆதரவுடன் போட்டியிட்டன. அத்தேர்தலில் தி.மு.க நேரடியாகப் போட்டியிடவில்லை, மாறாக ‘திராவிட நாடு’ கோரிக்கையை சட்டமன்றத்தில் பேசுவோம் என்று உறுதியளித்த கட்சிகளுக்கும், சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவளித்தது. அவ்வாறு உறுதியளித்து போட்டியிட்ட கட்சிகளுள் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும் ஒன்று.
அந்த தேர்தலில் இராமசாமி படையாட்சி உட்பட 19 பேர் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்களவைக்கான தேர்தலில் 4 இடங்களில் வென்றனர். ஆனால் தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டவில்லை. தனிப்பெரும் கட்சியான காங்கிரசுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) முதலமைச்சரானார். அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சி கூட்டணியை உடைத்து பல கட்சிகளை தம் பக்கம் இழுத்தார். அவ்வாறு இழுக்கப்பட்ட கட்சிகளுள் ஒன்று தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி. அப்போது ஆங்கிலேயர் காலத்தில் வன்னிய சமூகம், குற்றப் பரம்பரை என்ற பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது. அந்த நிலையை நீக்க வேண்டும் என்று நிபந்தனையுடன் ராஜாஜி அரசுக்கு ராமசாமி வெளியிலிருந்து ஆதரவளித்தார்.
1954-ல் காமராஜர் முதல்வரான பின்னர் இராமசாமி அவரது அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார். அதையடுத்து 1954-ல் அவர் தன் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார். 1962 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது காங்கிரசிலிருந்து விலகிய இராமசாமி மீண்டும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கினார். தேர்தலில் சுதந்திரா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவர் உட்பட அக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். சிறிது காலத்துக்குப் பின்னர் இராமசாமி கட்சியை மீண்டும் கலைத்து விட்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து விட்டார். 1980, 1984 பொதுத்தேர்தல்களில் காங்கிரஸ் சார்பாக திண்டிவனம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992-ல் மரணமடைந்தார்.
விடுதலை போராட்ட வீரரும், பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை உருவாக்க காரணமாக இருந்தவருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் சட்டப்பேரவையில் திறந்து வைக்கப்பட்டது. செப்டம்பர் 16 அவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாருக்கு அவர் பிறந்த ஊரான கடலூரில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ரூ.2.15 கோடி மதிப்பில் தமிழக அரசு சார்பில் நினைவு மணி மண்டபம், முழு உருவ வெண்கல சிலை மற்றும் நூலகம் நிறுவப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது. தலைமைச்செயலாளர் சண்முகம் வரவேற்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணிமண்டபத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அவரும், ஓ.பன்னீர்செல்வமும் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் முழுஉருவ சிலைக்கும், உருவபடத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் இருவரும் மணிமண்டப வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.
பின்னர் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இந்தியா வலிமையான, வளமான நாடாக திகழ்கிறது என்றால் அந்த வலிமைக்கு வேர்களாக விளங்கியவர்கள் விடுதலைக்காக போராடிய வீர மறவர்கள்களின் தியாகங்கள் தான். அத்தகைய விடுதலை போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு நாடு விடுதலை பெற அரும்பாடு பட்டவர்களில் ராமசாமி படையாட்சியாரும் ஒருவர். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனினும் முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டவர். நகைச்சுவையாகவும், தன்னுடைய கருத்தை ஆணித்தரமாகவும் எடுத்து கூறக்கூடியவர். அதேசமயம் தன்மானத்தை விட்டு கொடுக்காமல் துணிச்சலாக பேசுபவர். சொன்னதை செய்தார். செய்ய முடியும் என்பதை மட்டுமே சொன்னார். கடலூரில் ரெயில்வே இருப்பு பாதை அமைக்கவும், பேருந்து நிலையம், அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியன அமைப்பதற்காக தனது சொந்த நிலத்தை தானமாக வழங்கியவர். வன்னியர் சமுதாய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க ஓராசிரியர் வேலை என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அவரது சீரிய பணிகளை சிறப்பிக்கும் வகையில், அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடி வருகிறோம். சட்டமன்றத்தில் அவரது முழுஉருவ படம் என்னால் திறந்து வைக்கப்பட்டது.
அமைச்சர்கள், வன்னியர் சமுதாய தலைவர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க அவர் பிறந்த கடலூரில் மணி மண்டபமும், அதில் அவரது முழுஉருவ சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது. பா.ம.க நிறுவனர் இராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி இராமதாஸ், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் வன்னிய சமுதாயம் தொடர்பாக முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அது பரிசீலனையில் உள்ளது.
தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை தொடர்ந்து பாதுகாத்திட ஜெயலலிதா, 1993-ஆம் ஆண்டு சட்டமேற்றி அரசியலமைப்பு சட்டத்தில் 9-ஆவது அட்டவணையில் சேர்த்து அரசிதழில் பாதுகாப்பு பெற்று தந்தார். சமூக நீதிக்கு ஆபத்து வரும்போதெல்லாம் அதற்கு எதிர்ப்பு குரல் கொடுத்து, அதனை களைய உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது அ.தி.மு.க அரசு. வாக்குறுதிகளை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அதை நிறைவேற்றும் ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி” என்றார்.
விழாவில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ ஓ.எஸ்.மணியன், சேவூர் ராமச்சந்திரன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இராமசாமி படையாட்சியாரின் மகன் எஸ்.எஸ்.இராமதாஸ் நன்றி கூறினார்.