குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னெடுப்புகளை குடியரசு தலைவர் வேட்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா நேற்று முன்தினம் தமிழகம் வந்திருக்கும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு இன்று தமிழகம் வருகை புரிந்துள்ளார். சென்னை வந்துள்ள திரௌபதி முர்மு நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக கூட்டணிக் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.
பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவின் ஓபிஎஸ்- இபிஎஸ் என இருவருக்கும் அழைப்பு விடுத்திருந்தும், அதிமுக ஒற்றைத் தலைமை பூசல் காரணமாக இபிஎஸ், ஓபிஎஸ் ஒரே நேரத்தில் இந்த நிகழ்வில் பங்கேற்காத சூழல் ஏற்பட்டது. முதலில் இபிஎஸ் தரப்பு திரௌபதி முர்முவை சந்தித்து ஆதரவளித்ததைத் தொடர்ந்து பின்னர் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் திரௌபதி முர்முவை சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''ஒரு பழங்குடியின பெண் குடியரசு தலைவர் பதவிக்கு வர வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது இந்தியாவில் ஜனநாயகம் என்பது முழுமையான அளவிற்கு இருக்கிறது என்பற்கு எடுத்துக்காட்டாக இந்த தேர்வு இருக்கிறது'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர், ஓபிஎஸ் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு இபிஎஸ்க்கு பின்னர் திரௌபதி முர்முவை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், '' அதிமுகவை பொறுத்தவரை பொதுக்குழுதான் இறுதி அதிகாரம் படைத்தது. ஐ.நா சபை எப்படி உலகிற்கு முக்கியமான ஒன்றாக இருப்பதைப்போல் எங்கள் கட்சிக்கு அதிமுக்கியம் வாய்த்த அதிகாரம் கொண்ட அமைப்பு என்று சொன்னால் அது பொதுக்குழுதான். பொதுக்குழுவில் ஓபிஎஸ் கலந்துகொண்டு பொதுக்குழு எடுத்த முடிவுக்கு ஓபிஎஸ் கட்டுப்பட்டிருக்க வேண்டும். கட்சிக்காரர்களின் எண்ணத்தை ஏற்றுக்கொண்டு அவர் நடந்திருக்க வேண்டும். எனவே இதற்கு காரணம் அவரேதான். நாங்கள் காரணம் கிடையாது. அதிகாரம் கொண்ட பொதுக்குழுவிற்குக் கட்டுப்பட்டிருந்தால் இப்படி அவர் தனியா வந்து பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது''என்றார்.