Skip to main content

தபால் ஓட்டுகள்: எந்த தவறும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்

Published on 11/05/2019 | Edited on 11/05/2019

 

தபால் ஓட்டுகளை சரியான முறையில் வெளிப்படையாக தேர்தல் ஆணையம் கையாளவில்லை. அரசு அதிகாரிகளின் ஆட்சிக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக அரசு மெத்தனம் காட்டுகிறது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

2019 பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தேர்தல் ஆணையத்தின் மீது பல காரணங்களால் அரசியல் கட்சிகளுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது. சிறப்பு தேர்தல் மேற்பார்வையாளரை நியமிக்க வேண்டுமென்று எல்லா எதிர்க்கட்சிகளும் கோரிக்கை வைத்து வருகிறோம். காரணமே இல்லாமல் வாக்கு இயந்திரங்களை அங்கும் இங்கும் அதிகாரிகள் அனுப்பி வைப்பது சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. 

 

vote



ஏன் வாக்கு இயந்திரம் இந்த தொகுதிக்குள் சென்றது என்று கேள்வி எழுப்பினால் பதில் சொல்ல முடியாமல் தேர்தல் அதிகாரிகள் தடுமாறுகிறார்கள். தொடர்ந்து தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாகவே இந்த தேர்தலில் செயல்பட்டு வருகிறது. தேர்தல் பணிகளுக்கு அனுப்பப்படும் அதிகாரிகளுக்கு தபால் வாக்கு படிவங்கள் கொடுப்பதிலே கூட மிகப்பெரிய குளறுபடி இருந்தது. இன்னும் கூட சில பேருக்கு வாக்கு செலுத்தும் படிவம் கிடைக்காமல் இருப்பது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்குகிறது. 
 

ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் தபால் வாக்குகளை கையாளுகின்ற விதம் வெளிப்படையாக இல்லை. அரசு அதிகாரிகளும், ஆசிரியர்களும் அரசுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதற்காக அலைக்கழிக்கப்படுகிறார்கள். தபால் வாக்குகள் தபாலில் தான் போட வேண்டுமென்று தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள். தபால் ஓட்டு கடிதங்கள் கிழித்து எறியப்படுவதாக கூட செய்திகள் வருகின்றன. 

 

விழிப்புணர்வு உள்ள அரசு அதிகாரிகளோ, ஆசிரியர்களோ குறிப்பாக தேர்தல் வாக்குச்சாவடி பணியாற்றியவர்கள் வாக்களிக்காமல் இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. ஆனால் தபால் வாக்குகள் பல தொகுதிகளில் 50 சதவீதத்திற்கு குறைவாகவே வந்திருப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் கணக்கு காட்டுகிறார்கள். இது உண்மையாக இருக்க வாய்ப்பு கிடையாது. அரசு அதிகாரிகளை யாரை சந்தித்து கேட்டாலும் ஓட்டு போட்டு படிவத்தை தபாலில் அனுப்பியதாகவே சொல்கிறார்கள். 
 

ஆட்சியர் அலுவலகத்தில் இந்த தவறுகள் நடந்தால் அது வெளியில் தெரிவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. பல தேர்தல்களில் தேர்தல் முடிவுகளில் தபால் ஓட்டுகள் பெரும் பங்கு வகித்திருக்கிறது. ஜனநாயக முறையில் தபால் ஓட்டுகள் எந்த தவறும் நடக்காமல் அந்தந்த வேட்பாளர் கணக்கில் சேர்வதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்