ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களை அறிவித்தும் தள்ளாடி வருகிறது அதிமுக. எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்து கிடக்கும் சூழ்நிலையில் பொதுக்குழு தொடர்பான வழக்கில் இபிஎஸ் தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனு மீது நேற்று முன் தினம் தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்தது.
இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் தீர்ப்பளித்த நீதிபதிகள், “'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை முன்னிறுத்துவதற்கான இடைக்கால ஏற்பாடாக ‘ஓபிஎஸ் தரப்பினரையும்’ உள்ளடக்கிய பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். இது இடைக்கால ஏற்பாடு மட்டும் தான். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பில் இந்த இடைக்கால உத்தரவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.” எனக் கூறினர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் விநியோகம் செய்யப்பட்டது.
அதேபோல் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வைத்திலிங்கம் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் போட்டியிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தே ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அத்தகவல் இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் இந்நிலையில் இரட்டை இலைச் சின்னத்தில் பொதுவேட்பாளராக யார் நின்றாலும் அவர்களை ஆதரிப்போம் என ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிமுக ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளராக வேட்புமனுதாக்கல் செய்த செந்தில் முருகனை ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அமைப்புச் செயலாளராக நியமித்துள்ளார்.