நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. அதேபோன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் இரண்டு கட்டங்களாக 83 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், பா.ஜ.க கூட்டணியில் த.மா.க, புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த 10ஆம் தேதி மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷண் ரெட்டி ஆகியோர் சென்னை வந்த போது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து, பா.ஜ.கவுடனான கூட்டணியை உறுதி செய்தார். இந்த நிலையில், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று (12-03-24) நள்ளிரவு மீண்டும் மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷண் ரெட்டி ஆகியோரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பையடுத்து. ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “நாடாளுமன்ற தேர்தல் குறித்த பா.ஜ.க.வுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை மிக சுமுகமாக முடிந்தது. பா.ஜ.க தலைமையில், அதிக கட்சிகள் இடம் பெற்றுள்ளதால் மெகா கூட்டணியாக அமைந்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் பெறுவோம். அந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம்” என்று பேசினார்.