உலகிலேயே நெய்வேலியிலும் ஆஸ்திரேலியாவிலும் இருந்த தன்னூற்று இப்போது நெய்வேலியில் இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் நில அபகரிப்பை தடுத்தல் மற்றும் நிலக்கரி சுரங்க விரிவாக்கம், புதிய நிலக்கரி சுரங்கங்கள் இல்லாத பகுதியாக கடலூர் மாவட்டத்தை அறிவிக்கச் செய்தல் குறித்து தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் விவசாய சங்கங்கள், பொதுநல அமைப்புகள், வணிகர் அமைப்புகள், இளையோர் மற்றும் மகளிர் அமைப்புகள் பங்கேற்புடன் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுச்சாமி வரவேற்றார். பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும் என்.எல்.சி நில எடுப்பால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த காணொளி ஒளிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து என்.எல்.சி நிலம் எடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நிலம் எடுப்பதை தடுக்க வேண்டிய முறைகள் குறித்தும் விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுநல அமைப்பினர் ஆலோசனைகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும் என நாங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். ஏக்கருக்கு 1 லட்சத்துக்கு கீழ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதனை 6 லட்சமாக கொடுக்க வைத்தோம். ஆனால் வேலை கொடுக்கவில்லை. அப்போது என்.எல்.சியால் மற்ற பாதிப்புகள் குறித்து எங்களுக்கு தெரியவில்லை. இன்று ஏக்கருக்கு 25 லட்சம் கொடுப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகிறார். 1700 பேருக்கு வேலை கொடுக்கிறோம் என்று கூறவில்லை. 1700 பேருக்கு வேலை இருக்கிறது என்றுதான் தெரிவித்துள்ளார். 1956 ஆம் ஆண்டு 37,000 ஏக்கர் நிலத்தை பறிமுதல் செய்து அன்றைய மக்கள் தொகையில் 25 ஆயிரம் பேரை அப்புறப்படுத்தினார்கள். அந்த மக்களுக்கு இன்று வரை என்.எல்.சி துரோகம் இழைத்து வருகிறது. முதலாவது, இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக 13,000 ஏக்கர் நிலங்களும், புதிய மூன்றாவது சுரங்கத்திற்காக 12 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் பரங்கிப்பேட்டை கிழக்கு நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்காகவும், புதிய வீராணம் ஏரி நிலக்கரி சுரங்க திட்டத்திற்காகவும் என கடலூர் மாவட்டத்தில் 91 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உலகிலேயே நெய்வேலி, ஆஸ்திரேலியாவில் என 2 இடங்களில் மட்டும் தான் ஆர்டிசியன் ஊற்று எனப்படும் தன்னூற்று இருந்தது. ஆனால் இன்று நெய்வேலியில் இல்லை. ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. நெய்வேலியில் 8 அடியில் இருந்த தண்ணீர் 1000 அடிக்கு சென்று விட்டது. அமைச்சர் சட்டசபையில் கூறுகிறார், ‘நிலம் வைத்திருப்பவர்களுக்கு வேலை வழங்கப்படும்’ என்று. ஆனால் இங்கே நிலம் வைத்திருப்பவர்கள் 5 சதவீதம் பேர் தான். ஆனால் அந்த நிலங்களை நம்பி கூலி தொழிலாளர்களாக இருப்பவர்கள் 95% பேர். அவர்களுக்கு என்ன செய்வீர்கள் என கேட்டால் பதில் இல்லை. விவசாயத்தை அழித்து எங்களுக்கு வளர்ச்சி தேவையில்லை. நாடாளுமன்றத்தில் என்.எல்.சியை 2025க்குள் தனியாரிடம் விற்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனியாரிடம் விற்கப் போகும் நிறுவனத்திற்காக ஏன் விளைநிலங்களை கைப்பற்ற வேண்டும்? அதற்கு ஏன் தமிழக அரசு துணை போக வேண்டும்? இப்படியே விவசாய நிலங்களை எடுத்துக் கொண்டு சென்றால் விரைவில் உணவு பற்றாக்குறை வரும். இதனை எதிர்த்து தான் நாங்கள் போராடி வருகிறோம்" என்றார்.