அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரண்டு அணிகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இருதரப்பினரும் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று உரிமை கொண்டாடி வருகிறார்கள். இதில் ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கட்சிப் பொதுக் கூட்டங்கள் கூட்டுவது, அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் செய்வது எனத் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பு அமைதியாகவே இருந்து வந்தது.
இந்நிலையில், இன்று (டிச.21) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று கடந்த சனிக்கிழமை ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதற்கான முன்னேற்பாடாக நேற்று ஓபிஎஸ் அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதன் பின் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமைத் தாங்கினார். ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஜே.சி.டி பிரபாகர், “அதிமுக கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்று எம்ஜிஆர் யாரும் மாற்ற முடியாத விதியை எழுதிவிட்டுப் போனார். அதை ஜெயலலிதா தொடர்ந்து கடைப்பிடித்தார். ஆனால், அதை பழனிசாமி மாற்ற முற்படுகிறார். அதிமுக கூட்டத்தில் சூழ்ச்சியும் தந்திரமும் தெரியாத தலைவரை சங்கடப்படுத்தினால் அதிமுகவிற்கு மாசு ஏற்படும். இது கட்சியைப் பேராபத்திற்குக் கொண்டு போய் விடும் எனச் சொன்னேன்.
இப்படி நான் பேசியது ஓபிஎஸ் முதல்வராக அரியணை ஏற வேண்டும் என்பதற்காக அல்ல. சர்வாதிகாரப் போக்கு தலை எடுக்கிறது. இதனால் அதிமுக அழிந்து விடும் என்ற கவலையில் நான் பேசினேன். மனசாட்சிக்குப் பயந்தவர்கள் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறார்கள்.
பழனிசாமி மெகா கூட்டணி அமைப்பேன் எனச் சொல்கிறார். அதைத்தான் நானும் சொல்கிறேன். அதிமுக மெகா கூட்டணி அமைக்கும். அதன் தலைவராக ஓபிஎஸ் தான் இருப்பார்” என்று பேசினார்.