பாஜகவை வீழ்த்துவது மட்டுமே அனைவரது எண்ணமாக இருக்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் இன்று (24/04/2023) பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரைச் சந்தித்தார். அகில இந்திய அளவில் பாஜகவை எதிர்க்க வலுவான எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில் இரு முதலமைச்சர்களின் இந்த சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, “பாஜகவிற்கு எதிரான கூட்டணியில் எனக்கு எவ்வித ஈகோவும் இல்லை. இந்த தேர்தல் பாஜகவிற்கும் மக்களுக்கும் இடையேயானதாக மட்டுமே இருக்கப்போகிறது. நிதிஷ் குமாரிடம் ஒரேயொரு கோரிக்கை மட்டும் வைத்துள்ளேன். பீகாரில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினால், நமக்கான அடுத்த இலக்கு என்ன என்று முடிவு செய்யலாம். ஆனால், முதலில் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்ற செய்தியை மக்களுக்கு கொடுக்க வேண்டும். எனக்கும் ஆட்சேபனை இல்லை (அனைவரும் ஒன்றிணைவதில்) என்று முன்பே சொல்லிவிட்டேன். பாஜகவை பூஜ்ஜியம் ஆக்க வேண்டும். பாஜக ஊடகங்களின் உதவியாலும், அவர்கள் நாளுக்கு நாள் சொல்லும் போலி கதைகளாலும் பெரிய ஹீரோக்களாக மாறிவிட்டனர்” எனக் கூறினார்.