குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கின்றது. குஜராத்தில் ஆட்சி அமைப்பதற்காக பாஜக காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் குஜராத் மாநில அஹமதாபாத் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி எம்.பி, தேர்தல் வாக்குறுதிகளாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இது தற்போது குஜராத் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பிரதமர் மோடி, சமீபத்தில் தேர்தலில் இலவசங்கள் குறித்து பேசிய போது "இந்திய அரசியலில் இருந்து இலவசத் திட்டக் கலாச்சாரத்தை வேரறுக்க வேண்டும்" என கருத்து தெரிவித்திருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு தேர்தலின் போது, கட்சிகள் இலவசங்களை அறிவிக்க தடைகோரி பா.ஜ.க.வின் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், அரசியல் கட்சியினர் வாக்குறுதிகளை கொடுப்பதை நாங்கள் தடுக்க முடியாது. இலவசத் திட்டங்கள் என்றால் என்ன என்பது குறித்து வரைமுறை தேவை. இலவச கல்வி, இலவச மின்சாரம் ஆகியவை வழங்குவதைக் கூட இலவச அறிவிப்புகளாக கருத வேண்டுமா? என நீபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் குடிமக்கள் கண்ணியமாக வாழ்வதை 100 நாள் வேலைத் திட்டம் போன்ற திட்டங்கள் உறுதி செய்கின்றன என கருத்து தெரிவித்தனர்.
குஜராத் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில், அகமதாபாத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், "பெரும் பணக்கார தொழிலதிபர்களுக்கு கடனை தள்ளுபடி செய்யும் பாஜக, விவசாயிகளுக்கு கடன்களை தள்ளுபடி செய்ததுண்டா? குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 3 லட்சம் வரையிலான விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும். தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500 வரை குறைக்கப்படும்" என கூறியுள்ளார்.