திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் மேற்கு ஒன்றியம் தி.மு.க. சார்பாக போடிகாமன்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கலிங்கபுரத்தில் ‘அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்’ மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராமன் தலைமை தாங்கினார்.
இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெரியசாமி, “பத்து வருடங்களுக்கு முன்பு தி.மு.க. ஆட்சியின்போது விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோம். எரிவாயுவுடன் கூடிய அடுப்பு கடன்களை தள்ளுபடி செய்தோம். சுய உதவிக்குழு பெண்களுக்கு கடன் உதவிகளை வழங்கினோம். ஆனால், இப்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசும், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசும் பொதுமக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் மாதந்தோறும் எரிவாயு விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, போக்குவரத்துக் கட்டண உயர்வு என படிப்படியாய் ஏற்றிக் கொண்டே வருகிறது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய இவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் தி.மு.க.வை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது. இந்த ஆத்தூர் தொகுதியில் மட்டும் 20 ஆயிரம் முதியோர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த நிவாரண உதவித்தொகையை நிறுத்திய இவர்களுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
தமிழக அரசும் ஆத்தூர் தொகுதியில் கடந்த 10 வருடங்களாக எந்த ஒரு நலத்திட்டத்தையும் முறையாக செயல்படுத்த அனுமதி கொடுப்பதில்லை. உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகளுக்கு 17 சதவீதம் லஞ்சம் வாங்கிக் கொடுக்கச் சொல்லி திட்ட அலுவலக அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இதற்காகவா அவர்களை பொதுமக்கள் தேர்ந்தெடுத்தார்கள். மக்கள் நலனுக்கான பணிகள் எதுவும் முறையாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.
தொகுதி மக்களின் நலன் கருதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20 கோடியில் ரூ.19 கோடியை 46 கிராம ஊராட்சிகள், 5 பேரூராட் சிகளுக்கு செலவழித்துள்ளேன். இதன் மூலம் தொகுதியில் குடி தண்ணீர் பிரச்சனை ஓரளவு தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. 120 நாட்களுக்குள் சீவல் சரகு ஊராட்சியில் உள்ள சமத்துவபுரம் சீரமைக்கப்பட்டு அழகிய நகரமாக மாற்றப்படும்” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ரெட்டியார்சத்திரம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர் தண்டபாணி, மாவட்டத் தொண்டரணி துணை அமைப்பாளர் கும்மம்பட்டி விவேகானந்தன் உள்பட கட்சி பொருப்பாளர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.