2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 சீட்டுகள் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜகவிற்கு 20 சீட்டுகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் நின்று சட்டமன்ற உறுப்பினரான நடிகர் கருணாஸ், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், ''அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுகிறது. அதிமுகவில் சசிகலா என்னை அறிமுகப்படுத்தியதால் என்னைப் புறந்தள்ளிவிட்டார்கள். சீட்டு கேட்கும் அளவிற்கு மானம்கெட்டுப் போகவில்லை. அதிமுக தோல்விக்கு வேலை செய்வோம். எடப்பாடி பழனிசாமி டெல்லியிலே சொல்கிறார், ‘நான் சசிகலாவால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்துதான் என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள்’ என்று. ஆனால் அவர் எப்படி முதல்வர் ஆனார் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. உலகிற்கே தெரியும். இதே கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா புகைப்படத்தின் முன் வைக்கப்பட்டிருந்த அகல் விளக்கின் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவருமே வரிசையாக நின்று சத்தியம் செய்ததை, யாரேனும் இல்லை என்று மறுக்கமுடியுமா? அன்றைக்கு நானும் தனியரசுவும் அங்கே இருந்தோம். ஆனால் நாங்கள் அகல் விளக்கில் சத்தியம் செய்யவில்லை. காரணம் நாங்கள் அதிமுவைச் சேர்ந்தவர்கள் இல்லை. தனி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். என்ன சத்தியம் செய்தீர்கள், அது உங்களுக்கும் சசிகலாவுக்குமே வெளிச்சம்'' என்றார்.