சமையல் எரிவாயு விலை கிடு கிடு உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிரான கண்டன போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டையிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் திடீரென புதுக்கோட்டை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏன் புறக்கணிப்பு என்று காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்ட போது... திமுக கூட்டணியில் தான் ஒவ்வொரு தேர்தலையும் காங்கிரஸ் கட்சி கூட்டணியாக இணைந்து சந்தித்து வருகிறது. அதனால் தான் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற முடிந்தது. புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை இழந்தாலும் மாவட்டத்தை உள்ளடக்கிய திருச்சி, கரூர், சிவகங்கை ஆகிய 3 நாடாளுமன்றத் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதனால் திமுகவில் யாருக்கும் வாய்ப்பு இல்லை. அதனால் உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சியை திமுக வுக்கே விட்டுக் கொடுக்க கூட்டணியில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் திமுக கூட்டணியில் தனிப் பெரும்பான்மை இருந்தும் தலைவர் வாக்கெடுப்பில் திமுக தோற்று அதிமுக வெற்றி பெற்றது. இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து மாலையில் நடந்த துணைத் தலைவர் தேர்தலில் அதிமுகவுடன் திடீர் கூட்டணி அமைத்து காங்கிரஸ் மாவட்டத் தலைவரின் மனைவி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டதுடன் காங்கிரஸ்காரர்களை துரோகிகள் என்று திமுகவினர் விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டனர். இதனால் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வரை யாரும் தெற்கு மாவட்டத் தலைவரை சந்திக்க மறுத்து வருகின்றனர்.
அதனால் விரைவில் மாவட்டத் தலைவரை மாற்றவும் வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில் தான் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்டத்தலைவர் தர்ம தங்கவேல் கலந்து கொண்டால் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மற்ற நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் அடுத்து திமுக நடத்தும் ஆர்ப்பாட்டம் போராட்டங்களில் கலந்து கொள்ளலாம் என்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கூறியுள்ளதால் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள மாட்டார்கள்.