ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தோல்விகரமான வெற்றி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்து முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 981 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். ஈவிகேஎஸ். இளங்கோவன் மற்றும் தென்னரசுவிற்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம் 66 ஆயிரத்து 675 வாக்குகளாக இருப்பதால் இளங்கோவன் வெற்றியை இமாலய வெற்றியாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “திமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கும் இச்சூழ்நிலையில், ஜனநாயக முறைப்படி இந்த இடைத் தேர்தல் நடைபெற்றிருந்தால் கழகம் மகத்தான வெற்றி பெற்றிருக்கும். ஆனால், திமுகவினர் பணநாயகத்தின் மூலமாக காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர். இந்த வெற்றி குறித்து பெருமை கொள்வது திமுகவுக்கு அழகல்ல.” எனக் கூறியிருந்தார்.
ஆனால் அதிமுக தோல்விக்குக் காரணம் எடப்பாடி பழனிசாமிதான் என டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “எங்களைப் பொறுத்தவரை இது தோல்விகரமான வெற்றிதான். அவர்களுக்கு இது வெற்றி அல்ல. டெபாசிட் போய்விடும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், எத்தனை அடக்குமுறைகள் எவ்வளவு பணம் கோடி கோடியாக செலவு செய்தாலும் அதைத் தாண்டி மக்கள் 44 ஆயிரம் பேர் அதிமுகவிற்கு ஆதரவளித்துள்ளார்கள். பல கோடி செலவு செய்து அவர்கள் பெற்ற வெற்றி என்பது வெற்றி அல்ல.” எனக் கூறினார்.