நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்து முன்னிலை வகித்து வந்தார்.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 981 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். ஈவிகேஎஸ். இளங்கோவன் மற்றும் தென்னரசுவிற்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம் 66 ஆயிரத்து 675 வாக்குகளாக இருப்பதால் இளங்கோவன் வெற்றியை இமாலய வெற்றியாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
காலையிலேயே அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறிவிட்டார். மேலும் வாக்கு எண்ணிக்கை முடிவில் நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 10,804 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,301 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.