அ.தி.மு.க. அமைச்சர் வேலுமணியின் பவர் யுத்தத்துக்கு எதிராக, சுகாதாரத் துறை அமைச்சரான விஜயபாஸ்கர் நேரடியாகவே வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகத் தகவல் வெளியாகி வருகிறது. அண்மையில் கரோனா தொடர்பான ஆய்வுக் கூட்டம் கோட்டையில் தொடங்க இருந்த நிலையில், அமைச்சர் வேலுமணியின் வலது கையாகச் செயல்படும், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷைக் குறிவைத்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னையில் கரோனா கட்டுமீறிப் பரவக் காரணம் மாநகராட்சி கமிஷனரின் கவனக் குறைவுதான். அவரோடு சேர்ந்து பயணித்த மாநகராட்சியின் அடிஷனல் டைரக்டருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. சக அதிகாரிகளோடும் கமிஷனர் ஒத்துழைக்க மறுக்கிறார். அதனால் அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.
இதனால் டென்ஷனான அமைச்சர் வேலுமணி, விஜயபாஸ்கரிடம், உங்க டிரைவர் முருகனுக்கே கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமா? சுகாதார அமைச்சரான உங்கள் குடும்பமே இப்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் உங்கள் பதவிக்கு வேறு ஒருவரை நியமித்துவிடலாமா? அதேபோல் முதல்வர் அலுவலகத்துலேயே 5 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அப்படியென்றால் முதல்வர் அலுவலகத்தை மூடிவிடலாமா? இல்லை, முதல்வரையே மாற்றச் சொல்வீர்களா என ஏடாகூடமாக் கேட்டு, எடப்பாடியையும் திகைக்க வைத்துள்ளார். ஒருமையில் பேசக்கூடிய அளவுக்கு நிலைமை போயிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசிவருகின்றனர்.