Published on 10/08/2019 | Edited on 10/08/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தேனி தொகுதியை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் படுதோல்வி அடைந்தது. திமுக கூட்டணி 37 இடங்களில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனால் வேலூர் தொகுதியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த ஒரு தொகுதிக்காக 209 தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது. அதோடு அனைத்து அமைச்சர்களும் வேலூர் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். அதிமுக சார்பாக போட்டியிட்ட ஏ.சி.சண்முகமும், அதிமுக அமைச்சர்களும் வேலூர் மக்களவை தொகுதி முழுவதும் தேர்தல் செலவிற்கு பணத்தை கணக்கு பார்க்காமல் செலவு செய்தனர். வேலூரில் வெற்றி பெற்றுவிட்டால் ஓபிஎஸ் மகன் மட்டும் தான் வெற்றி பெற்றார் என்ற நிலையை மாற்றலாம் என்று எடப்பாடி தரப்பு கருதியதாக சொல்லப்படுகிறது.

மேலும் பாஜகவிடம் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது ஓபிஎஸ் மகனுக்கு வாங்காமல், சீனியரான ஏ.சி.சண்முகத்துக்கு வாங்கும் நிலையில் எடப்பாடி தரப்பு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதை உற்று கவனித்த ஓபிஎஸ் தரப்பு வேலூரில் அதிக அளவில் கவனம் செலுத்தவில்லை என்றே கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாள் வரைக்கும் முதல்வர் எடப்பாடியும் ,துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வமும் ஒரே மேடையில் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யவே இல்லை. இதுவே அ.தி.மு.க தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த தோல்வியை சற்றும் எதிர் பார்க்காத எடப்பாடி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறுகின்றனர்.