கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,985- லிருந்து 19,984 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 603- லிருந்து 640 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,260-லிருந்து 3,870 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 5,218 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 722 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 251 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை தினந்தோறும் 4 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறது. ரேபிட் டெஸ்ட் கிட்களை அனைத்து மாநிலங்களுக்கும் போதுமானதாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று செய்தியாளர்கள் மத்தியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்தது. அப்போது ரேபிட் டெஸ்ட் கிட்கள் மாறுபட்ட முடிவுகள் காட்டுவதாக வெளியான தகவல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டபோது. ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலங்களில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கரோனா பரிசோதனை செய்தபோது ஒரு முறை வேறு முடிவும், அடுத்தமுறை வேறுவிதமான முடிவு வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மாறுபட்ட முடிவுகள் வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு கரோனாவை கண்டறிய ரேபிட் டெஸ்ட் கிட்களைப் பயன்படுத்த வேண்டாமென இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தர்மபுரி திமுக எம்பி டாக்டர்.செந்தில்குமார் தனது ட்விட்டரில் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "இது மத்திய நரேந்திர மோடி அரசாங்கத்தின் தோல்வி. 30 நாள் ஊரடங்கிற்குப் பிறகு இப்பொழுது தான் சீனாவில் இருந்து ராபிட் கிட் வந்ததுள்ளது. ஆனால் அது தவறான பரிசோதனை முடிவுகளைக் காட்டுகிறது. இந்த அரசாங்கத்திற்கு ஒரு வேலை தான் உள்ளது. அது நாட்டு மக்களைக் காப்பாற்றுவது. அதைக் கூடச் செய்ய முடியாத அரசாங்கம் எதற்கு?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் திமுகவினர் பலர் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.