சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் அப்துல் ரகுமானுக்கு ஏணி சின்னத்தில் ஆதரவு திரட்டும் பிரச்சார பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று, ஆதரவு திரட்டி பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுக - பாஜக கூட்டணியை முறியடிக்க இந்த கூட்டணி உருவாகியுள்ளது. பாஜகவை தமிழ்நாட்டில் அனுமதித்தால் இடஒதுக்கீடு இருக்காது; மாநில உரிமை குறித்து யாரும் பேச முடியாது; மதக்கலவரம், சாதிக்கலவரம் நடக்கும்; தமிழ்நாட்டு மக்களின் வாழ்விற்கு ஆபத்து வரும். சட்டமன்றத்தில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாத பாஜகவை எடப்பாடி பழனிசாமி தூக்கிப் பிடித்துள்ளார். கேட்டால், ‘இணக்கமான சூழ்நிலை இருந்தால்தான் தமிழகத்திற்கு நன்மை பயக்கும்’ என்கிறார்.
அப்படி இருந்திருந்தால், கஜா, ஒக்கி புயல்களில் நிவாரண நிதி பெற்றாரா? கரோனா நிவாரண நிதி பெற்றாரா? ஜிஎஸ்டிக்கான பங்களிப்பை பெற்றாரா? எதுவுமே இல்லை. ஆனாலும் பாஜகவிற்கு அடிமையாக இருந்ததுதான் இணக்கம், ஏன்? எல்லாம் லஞ்சம், ஊழல்தான். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுகளால் அரசுடமையாக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு அதைத்தாண்டி ஊழல் நடந்திருக்கிறது, மேலும் ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோரின் பணியிட மாற்றத்திற்கு லஞ்சம் தலை விரித்தாடுகிறது. இதுபோன்று ஊழல் செய்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் மோடியை ஆதரிக்கிறார்கள். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 1,500 ரூபாய் தருகிறேன், 6 சிலிண்டர் தருகிறேன், வாஷிங் மெஷின் தருகிறேன் என்றெல்லாம் கூறுகிறார்கள். இப்போது ஆட்சியில் இருப்பது நீங்கள்தானே, அதையெல்லாம் இருக்கும்போதே கொடுத்திருக்கலாமே? 100 நாள் வேலை கொடுக்கக் கூட வக்கில்லாத அரசு இந்த அரசு.
எடப்பாடி பழனிசாமி அரசு மீது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 24 பக்க ஊழல் அறிக்கையைக் கவர்னரிடம் கொடுத்தார் பாமக அன்புமணி. இப்போது அந்தக் கட்சி எப்படி புனிதமான கட்சியானது. ஊழல் கட்சி எப்படி உத்தம கட்சியானது. டயர்நக்கி என்று கூறியவர், எடப்பாடி பழனிசாமியின் அரசை இப்போது ஆண்மையான அரசு என்கிறார் ராமதாஸ். ஆனால் அதை எப்படி பரிசோதித்தார் என்பது தெரியவில்லை. இவர்கள் கூட்டணியில் உள்ள பாஜக இடஒதுக்கீடு என்ற கொள்கையை ஏற்குமா? 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. 100 ஆண்டுகளாக இடஒதுக்கீடு உள்ளது, ஆனால் தற்போது மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு என்பதே இருக்காது. என்எல்சி, எல்ஐசி, சேலம் உருக்காலை, திருச்சி பெல் போன்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்பட உள்ளது.
அம்பானி, அதானிக்கு காவடி தூக்குதல் என்பதற்காக மட்டுமே அல்ல, இவையெல்லாம் தனியாருக்குச் சென்றால் இடஒதுக்கீடு இருக்காது என்பதற்கான நயவஞ்சகம்தான். ‘நானும் ஒரு விவசாயி’ என பச்சை துண்டைப் போட்டுக்கொண்டு எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். 4 மாதமாக டெல்லியில் போராடும் விவசாயிகளைத் தண்ணீரை அடித்து கலைக்க மோடி அரசு முயற்சித்தது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பல நாடுகளிலிருந்தும் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுகிறது. ஆனால் விவசாயி எனக் கூறும் எடப்பாடி பழனிசாமி ஏன் அவர்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. கேரள சட்டசபையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றினோம். ஏன் தமிழ்நாட்டில் நிறைவேற்றவில்லை. பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியில் சட்டசபையிலேயே வேளாண் சட்ட நகலைக் கிழித்து எறிந்தார் முதல்வர் நாராயணசாமி. அவரும் கேரளா முதல்வரும்தான் விவசாயிகளின் உண்மையான நண்பன். எட்டு வழி சாலை திட்டம், கெயில் குழாய் திட்டம் போன்றவை வேண்டாம் என விவசாயிகள் கூறுகிறார்கள். ஆனால் நிறைவேற்றிட எடப்பாடி பழனிசாமி துடிக்கிறார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் குற்றச்சாட்டுகளில் முதல்வர் எடப்பாடி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் என அனைவரும் சிறைக்குச் செல்வது உறுதி. பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டம் நிறைவேறுவதற்கு அதிமுகவும், பாமகவும்தான் காரணம். ஆனால் இன்றைக்கு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை சட்டத்தை நிறுத்தி வைக்க வலியுறுத்துவோம் என்று கூறுகிறது. இது யாரை ஏமாற்றும் வேலை. திமுக கூட்டணி தமிழகத்தின் உரிமைகளை மீட்கவும், கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவற்றைப் பாதுகாக்கவும் உருவாக்கப்பட்ட கூட்டணி. அதனால் ஒரு இடங்களில் கூட அதிமுக அணி வெற்றிபெறக்கூடாது. மக்களவைத் தேர்தலைவிட மோசமான தோல்வியை அதிமுக அணி சந்திக்கும்” என பாலகிருஷ்ணன் பேசினார்.
முன்னதாக காட்டுமன்னார்கோவிலில் திமுக தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் சிந்தனை செல்வனுக்கு பானை சின்னத்திலும், புவனகிரி பேருந்து நிலையம் அருகே புவனகிரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனுக்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்கு கேட்டு பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சிகளான திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் திரளாக கலந்துகொண்டனர்.