நேற்று பெங்களூருவில் 26 கட்சிகள் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 'இந்தியா வெல்லும்; அதை 2024 சொல்லும்' என்ற தலைப்பில் கட்சித் தொண்டர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், 'மதுரை மாநகரில் நமது உயிருக்கு நிகரான தலைவர் கலைஞரின் நூற்றாண்டுப் பெருமையாக ஜூலை 15 ஆம் தேதி காமராஜர் பிறந்த நாள் அன்று திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் மக்களிடையே மகத்தான ஆதரவைப் பெற்றிருப்பதோடு இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது. மதுரைக்கு மட்டுமின்றி தமிழகத்தின் தென் மாவட்டங்கள் அனைத்திற்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கிறது.
நேற்று பெங்களூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நான் பங்கேற்றுக் கொண்டிருந்த பொழுது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகன் எம்.பி கௌதம சிகாமணி ஆகியோரைக் குறி வைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. திமுக இதுபோன்ற சோதனைகளையும் மிரட்டல்களையும் கடந்து நெருப்பாற்றில் நீந்தி வந்த இயக்கம். கலைஞர் இதிலிருந்து மீண்டு வருகின்ற பேராற்றலை நமக்குப் பயிற்றுவித்திருக்கிறார். பழிவாங்கும் பச்சையாக அரசியல் செய்யும் பாஜக அரசினுடைய தொடர் நடவடிக்கைகள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்குமான வெற்றியை எளிதாக்கி வருகிறது.
உண்மையான இந்தியாவின் எதிரிகள் யார் என்பதை அடையாளம் காட்ட வேண்டியது நமது முதன்மையான பணி. அச்சுறுத்தலுக்காக அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு பயன்படுத்துவது ஜனநாயக விரோதச் செயல். அமலாக்கத்துறையின் செயலைக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், லாலு பிரசாத் ஆகியோர் கண்டித்துள்ளனர். இந்தியா என்ற சொல் பாஜகவுக்கு பிடிக்காத சொல்லாக ஆகிவிட்டது. 'இந்தியா பிடிக்காவிட்டால் பாகிஸ்தானுக்கு போ' எனப் பேசிய பாஜகவினர் இப்போது எந்த நாட்டுக்கு விசா வாங்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. உண்மையான எதிரிகள் யார் என்பதை அடையாளம் காட்ட வேண்டியதுதான் நமது பணி. பல அரசியல்வாதிகள் மீது வழக்குகள் உள்ள போதிலும் அமைச்சர்களை மட்டும் குறிவைத்துள்ளது அமலாக்கத்துறை. இந்தியாவின் எதிரிகளான மதவாத, ஜனநாயக விரோத, மாநில உரிமைகளைப் பறிக்கும் சக்திகளை அடையாளம் காண்பீர். பாஜகவினரின் போலி தேசபக்தி முகமூடி கழன்று விழுவதைக் காண முடிகிறது' எனத் தெரிவித்துள்ளார்.