தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திட்டக்குடி (தனி) தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் து.பெரியசாமியை ஆதரித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா திட்டக்குடி அருகிலுள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, “திட்டக்குடியானது சிதம்பரம் அருகில் உள்ள கடவுள் வைத்தியநாத சுவாமியின் பூமி, வெற்றியின் பூமி. தமிழ்நாடு வள்ளலார் சுவாமிகளின் பூமி. தமிழ் மொழியானது இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே வழிகாட்டக்கூடிய மொழி. பிரதமர் மோடி, எங்கு சென்றாலும் தமிழ்மொழியை உச்சரிக்கிறார்.
ஐக்கியநாடுகள் சபையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற புறநானூற்றுப் பாடலை உச்சரித்தார் என்பதே தமிழ்மொழி எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை உணர்த்துகிறது. 48 ஆயிரம் கோவில்கள், 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் மற்றும் எண்ணற்ற மகான்கள் உதித்தது தமிழ் பூமி. ஜாதி, மத பேதமின்றி உலகம் எல்லோருக்கும் ஒன்று. பா.ஜ.க அத்தகைய உன்னத கொள்கையைப் பின்பற்றுகிறது. உலகத்திற்கே எடுத்துக்காட்டான இந்த தமிழ்க் கலாச்சாரத்தின் பாதுகாவலனாக பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடி திகழ்கின்றனர்.
பாரதத்தை உலகின் குருவாக மாற்றும் பிரதமரின் உன்னத குறிக்கோளோடு நாம் பாடுபட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் நோக்கத்தை உரைக்கிறேன். தி.மு.க, காங்கிரசின் குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும். பா.ஜ.க தனித்துவம் வாய்ந்த, வளர்ச்சியை முன்னெடுக்கக் கூடிய, தன்னலமற்ற கட்சி. 2ஜி என்பது மாறன் குடும்பத்தினர் இரண்டு தலைமுறையாக செய்த ஊழல், 3ஜி என்பது ஸ்டாலின் குடும்பத்தினர் மூன்று தலைமுறையாக செய்த ஊழல், 4ஜி என்பது காங்கிரஸ் கட்சி தலைமை நான்கு தலைமுறையாக செய்த ஊழல். ஊழலையே கலாச்சாரமாக கொண்ட காங்கிரஸ் தி.மு.க கூட்டணியை வீழ்த்த நாம் பாடுபட வேண்டும். தி.மு.க வெற்றிபெற மக்களின் உதவி தேவைப்படுவதால் ஓட்டுக்கேட்டு வருகிறார்கள்.
தி.மு.க என்பது குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து என்பதே அதன் விரிவாக்கம். காங்கிரஸ் கட்சி தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டதே இல்லை. தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்தது ஜெய்ராம் ரமேஷ். ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.கவும், அ.தி.மு.கவும் தான். தமிழ்க்கலாச்சாரத்தை பாதுகாக்கும் காவலனாக பிரதமர் மோடி உள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையால் அடிக்கடி சுடப்பட்டனர். ஆனால் மோடி பிரதமரான பின் அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச எல்லையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து நீலப்புரட்சி மூலம் தக்க நிதியுதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து மீனவர்கள் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார்.
ஜாஃப்னா பகுதிக்கு முதல் இந்தியப் பிரதமராக மோடி சென்று பார்வையிட்டு, தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாகப் பார்த்து வீடுகளை இழந்து நின்ற மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார். இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார். தமிழ்க்கடவுள் முருகனை, கருப்பர் கூட்டம் இழிவுபடுத்தியபோது பா.ஜ.க தவிர வேறு எந்தக் கட்சியும் குரல் கொடுக்கவில்லை. பா.ஜ.க உரிய நடவடிக்கை எடுத்து வேல்யாத்திரையை மேற்கொண்டது. இதைப்பார்த்த ஸ்டாலினும் கையில் வேல் எடுத்து ஃபோட்டோவிற்கு போஸ் கொடுத்தார். தமிழ்க் கலாச்சாரத்தை பா.ஜ.க காப்பாற்றுகிறது என்பதற்கு இது மிகப்பெரிய உதாரணம். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்காக 90 ஆயிரம் கோடி கொடுத்தது. தற்போது பிரதமர் மோடி ஆட்சியில் அதை விட 500 மடங்கு அதிகமாக 19 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.
தற்போது 2020 - 21ல், 2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு முழு அக்கறை எடுத்துக்கொண்டுள்ளது. தமிழகத்தில் நெசவு தொழிற்சாலைகளுக்கு 16ஆயிரம் கோடி நிதி, தேசத்தின் முக்கியமான பாதுகாப்புக்காக சென்னை, கோவை, ஒசூர், திருச்சி, சேலம் பகுதி இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் வகையில், 7 லட்சம் கோடி ரூபாய் நிதி, சித்த மருத்துவம் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தாய்மொழி வழிக்கல்வியை உறுதி செய்துள்ளது. சென்னை மெட்ரோ பணிகளுக்காக 3,770 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 12 ஸ்மார்ட் சிட்டி, ரயில்வே துறைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி, மதுரை எய்ம்ஸ் மற்றும் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத வகையில், தமிழகத்தின் வளர்ச்சியில் மோடி அக்கறை செலுத்தி வருகிறார் பிரதமர் மோடி. உள்ளூர்ப் பொருட்களுக்கு உலக அரங்கில் முக்கிய முத்திரை வழங்கப்பட்டு வருகிறது. பெண்கல்வி, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்கப்பட்டு, ஆதிதிராவிட மக்களுக்கே வழங்கப்படும். கோவில்கள் மீட்கப்பட்டு, இளைய தலைமுறையினரின் கல்வி, தேவையான வசதிகள் செய்து தரப்படும். 8,9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும்” என அவர் தெரிவித்தார்.