கோவை தெற்கு தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக மீது இம்மாதிரியான குற்றச்சாட்டுகளை வைத்தால் விமர்சனம் வைக்கத்தான் செய்வார்கள். மக்கள் முன் இது விவாதப் பொருளாகிறது. அதனால் மாநிலத் தலைவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு, யார் மேல் வைத்துள்ளாரோ அவர்கள் பதில் சொல்லட்டும். தமிழக அரசியலில் விவாதத்தை அண்ணாமலை துவக்கி வைக்கிறார். இதற்குரிய பதிலை சம்பந்தப்பட்ட நபர்கள் சொல்ல வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு.
அண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் வரை நீதிமன்றத்தை மட்டும் தான் நாடுவார் என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். எது வந்தாலும் அண்ணாமலை சந்திப்பதற்கு தயாராக உள்ளார். அதையும் அவர் சொல்லியுள்ளார். அண்ணாமலை திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலும் வெளியிட்டுள்ளார். இதன் வாயிலாக மக்களுக்கு சில தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். நீதிமன்றத்தை நாங்கள் நாடுவோம்; சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுப்போம் என அவர்கள் கூறினால் அதை வரவேற்கிறோம். எங்கு உண்மை இருக்கிறது என்பதை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்பது தான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு.
நான் காலையில் தான் டெல்லியில் இருந்து வந்துள்ளேன். வந்ததில் இருந்து தொகுதியில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டுள்ளேன். நான் முழுதாக அந்த வீடியோவை பார்க்கவில்லை இன்னும். பில்லில் முரண்பாடு இருக்கிறது எனச் சொல்லுகிறார்கள். 49க்கும் 47க்கும் இடையில் ஒரு நம்பர் தான் வித்தியாசம். பில் கேட்டீர்கள்... பில் வந்ததா இல்லையா அவ்வளவுதான். நீங்கள் பில் தான் கேட்டீர்கள். சீரியல் நம்பர் கேட்டீர்களா?” எனக் கூறினார்.