Skip to main content

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல்; வாக்களித்த தலைவர்கள்

Published on 17/10/2022 | Edited on 17/10/2022

 

All India Congress President Election; Voting Leaders

 

கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால் அப்போதைய கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியில் இருந்து விலகினார். அதன் பின் சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றார். முழு நேரத் தலைவரை தேர்ந்தெடுக்க முதலில் செப்டம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டது. அதன் பின் அக்டோபர் 17ல் கட்சித் தேர்தல் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. 

 

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் என  இரண்டு பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். அக்டோபர் 17- ஆம் தேதியான இன்று காலை 10.00 மணி முதல் காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 04.00 மணி வரை இந்த தேர்தல் நடைபெறும். அக்டோபர் 19- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு இருப்பதால் அவர் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் சங்கனகல்லு என்ற இடத்தில வாக்களித்தார். 

 

டெல்லி தலைமையகத்தில் மட்டும் 75 பேர் வாக்களிக்க உள்ளனர். டெல்லி தலைமையகத்தில் காலை 10 மணியளவில் ப.சிதம்பரம் வாக்களித்தார். சிறிது நேரத்தில் ஜெய்ராம் ரமேஷ் வாக்களித்தார். காலை 11 மணியளவில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் வாக்களித்தனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி தலைமைக் கழகத்தில் வாக்களித்தார்.

 

தேர்தலில் போட்டியிடும் போட்டியாளர்களான மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகாவிலும் சசி தரூர் கேரளாவிலும் வாக்களித்தனர். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி சென்னை சத்தியமூர்த்தி பவனில் வாக்களித்தார். 

 

தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் மொத்தம் 211 பேர். வாக்களிக்க வருபவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்த பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களின் பெயர்களுடனான பட்டியல் தயாரிக்கப்பட்டு வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்