முரண், மோதல் என அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் கிளம்பி, கடைசியில் சலசலப்புடன் கடந்த 23 ஆம் தேதி வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபமான ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நடந்து முடிந்தது. அக்கூட்டத்தில் வரும் ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற ஓபிஎஸ் ஜூலை 11 ஆம் தேதி நடக்கவிருக்கும் அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி தரக்கூடாது என கூறினார். டெல்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்தனர்.
பொதுக்குழுவில் 23 தீர்மானங்களைத் தவிர வேறெந்த தீர்மானமும் நிறைவேற்றப்படக்கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பினை எதிர்த்து யாராவது மேல்முறையீடு செய்தால் தங்கள் வாதங்களைக் கேட்காமல் உத்தரவிடக் கூடாது என ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதேபோல் அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்கிற வகையில், அவர் அறிவித்த பொதுக்குழுக் கூட்டமும் செல்லாது என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் வரும் ஜூலை 11 ஆம் தேதி அதே திருமண மண்டபமான ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற இபிஎஸ் தரப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.