தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், அன்று பதிவாகும் வாக்குகள் மே மாதம் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவித்தல் என அரசியல் கட்சித் தலைமைகள் பரபரப்பாக இருந்தன. அதுமுடிந்தது, வேட்பாளர்களை அறிவித்ததும் வேட்பாளர்கள் அவர்கள் தொகுதியில் பரபரப்பாயினர். அதேபோல் கட்சியின் முக்கிய தலைவர்களும், பொறுப்பாளர்களும் அவர்கள் கட்சியின் வேட்பாளர்களையும், கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.
சமீபத்தில் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆ.ராசா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையை உண்டாக்கியது. தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வரை அவதூறாகப் பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாஹுவிடம் புகாரளிக்கப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆ.ராசா, ''முதல்வரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. ஸ்டாலினையும் முதல்வரையும் அரசியல் குழந்தையாக ஒப்பிட்டு பேசிய எனது பேச்சை வெட்டியும் ஒட்டியும் சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்படுகிறது'' என கூறியிருக்கிறார். அதேவேளையில் ஆ.ராசா, பேசியதை கண்டித்து எழும்பூர் பகுதி அதிமுகவினர் எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் ஜங்ஷன் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.