சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று (11/07/2022) காலை 09.15 மணிக்கு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். கட்சியின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் விரோதமாக செயல்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகிய நான்கு பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியது பொதுக்குழு. கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்றொருபுறம், கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வெளியே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் அ.தி.மு.க.வினர் 11 பேரும், காவல்துறையினர் 2 பேரும் காயமடைந்தனர். இதனால் அங்கு காவல்துறை அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் இன்று காலை புகுந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில், ராயப்பேட்டையில் உள்ள காவல்நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வருவாய் துறையினர் காவல்துறையினருடன் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் ஜெகஜீவன்ராம், காவல்துறையினருடன் அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். பின்னர், அங்கு ஓ.பன்னீர்செல்வத்துடன் வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, அலுவலகத்துக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியே வந்து, நுழைவு வாயிலில் அமர்ந்து சிறிது நேரம் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து புறப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக, வருவாய் கோட்டாட்சியர் அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தார். அதேபோல், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளும் வருவாய் துறையினரால் பூட்டப்பட்டுள்ளது. மேலும், அ.தி.மு.க. தலைமை அலுவலகப் பகுதியை சுற்றிலும் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூட்டம் கலைந்து செல்லவில்லையென்றால், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.