அதிமுகவில் ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்துவந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூடியது. அந்தக் கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு கூட்டத்தில் புதிய தீர்மானங்களை நிறைவேற்றத் தடை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த 23ஆம் தேதி கூடிய பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருந்த அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக ஈபிஎஸ் தரப்பு அறிவித்தது. ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவை மீண்டும் கூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அளித்துவந்த 9 பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றி தற்போது ஈபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் தலைமையில் 9 பொதுக்குழு உறுப்பினர்களும் ஈபிஎஸ் இல்லத்திற்கு வருகை தந்து, அவருக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். அதிமுகவில் மொத்தம் 2,665 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ள நிலையில், இந்த 9 பேர் ஆதரவு மூலம் இபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2,432ஆக உயர்ந்துள்ளது.