!["Yoga is essential to prevent diabetes" - BJP Minister](http://image.nakkheeran.in/cdn/farfuture/piLoInTJl0IB0OZU6-ZmoxSJvC-lkv-mAL_Q5wExjM4/1699948576/sites/default/files/inline-images/th-1_4342.jpg)
உலகம் முழுக்க இன்று (நவ. 14ம் தேதி) உலக நீரிழிவு நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தத் தினத்தன்று மக்களுக்கு நீரிழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நீரிழிவு நோய் வந்தால் என்ன மாதிரியான சிக்கல்களை நாம் எதிர் கொள்வோம், அது நம் உடல் நலத்திற்கு எவ்வளவு ஆபத்தானது என்பன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இன்று தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஜி. கிஷான் ரெட்டி, ஐதராபாத்தில் உள்ள பர்கத்புரா பகுதியில் நீரிழிவு நோய் மையத்தை திறந்து வைத்தார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்று உலக நீரிழிவு நோய் தினம். நாம் நீரிழிவு நோயைக் கண்டு அச்சமடைய வேண்டாம். நாம், நமது உணவு முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். அதேபோல், தினசரியான நமது நடவடிக்கைகள், உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோயை தள்ளி வைக்கலாம்.
ஐதராபாத்தில் நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிகளவில் உள்ளனர். இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும். இன்சூலின் எடுப்போர் நீரிழிவு நோயை முறியடிக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போனில் மூழ்கியிருக்கின்றனர். அனைவரும் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்வதன் மூலம், நீரிழிவு நோயில் இருந்து தற்காத்து கொள்ளலாம்” எனப் பேசினார்.