கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றே தீர்வாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கரோனா தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பல்வேறு மாநிலங்கள், தடுப்பூசியை இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர் அளித்திருந்தன. ஆனால் ஃபைசர், மாடர்னா உள்ளிட்ட அமெரிக்கத் தடுப்பூசி நிறுவனங்கள், மத்திய அரசுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்குவோம் என்றும், மாநிலங்களுக்கு நேரடியாகத் தடுப்பூசிகளை வழங்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், ஸ்புட்னிக் v தடுப்பூசிகள் இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்படுமா என்பது குறித்து இந்தியாவிற்கான ரஷ்யத் துணை தூதர் ரோமன் பாபுஷ்கின் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "ஸ்புட்னிக் v தடுப்பூசிகளின் விநியோகம் ஒப்பந்தப்படியும், அட்டவணைப்படியும் நடைபெற்று வருகிறது. இந்திய நிறுவனங்களிடமிருந்தும், இந்திய மாநிலங்களிடமிருந்தும் தடுப்பூசி தொடர்பான கோரிக்கைகள் வருகிறது. அதனைக் கவனமாகப் பரிசீலித்து ஆய்வு செய்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மே ஒன்றாம் தேதி முதல் ஸ்புட்னிக் v தடுப்பூசிகள், இந்தியாவிற்கு இறக்குமதியாகத் தொடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி இந்தியாவில் நேற்று ஸ்புட்னிக் v தடுப்பூசிகளின் உற்பத்தி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.