மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் பெண்களுக்கு தொடர்ந்து நடந்து வருவதாக சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்தியத் திரையுலகை உலுக்கியுள்ளது. பிரபல நடிகைக்கு கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தையடுத்து, படப்பிடிப்பில் நடிகைகள் மற்றும் பணி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை குழுவை அமைத்தது கேரள அரசு. இக்குழு கடந்த 2019ஆம் ஆண்டு அம்மாநில முதல்வரிடம் ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால் அந்த ஆய்வறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளித்து வருகின்றனர். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும் நடிகைகளிடம் வாக்குமூலம் பெற்று சம்பந்தப்பட்ட திரை பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஹேமா கமிட்டி தொடர்பான வழக்கை விசாரித்த கேரளா உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு மாநில அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து அரசு இத்தனை காலமாக மௌனம் காத்தது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஏன் ஒரு எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை? 2019 -ல் அறிக்கை கிடைத்தும் ஏன் இவ்வளவு தாமதம். சுண்டு விரலைக் கூட அசைக்கவில்லை என கேள்விகளை அடுக்கியுள்ளனர். ஹேமா கமிட்டியின் முழுமையாக அறிக்கையை விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணைக் குழு ஊடகங்களைச் சந்திக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தல் கொடுத்துள்ளனர்.