உத்தராகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயம் அடைந்தார். ரூர்க்கி பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் பலத்த காயம் அடைந்துள்ளார். உத்தராகண்டில் இருந்து டெல்லிக்கு காரில் திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
ரிஷப் பந்த் வந்த கார் தீப்பிடித்து முற்றிலுமாகச் சேதம் அடைந்தது. அவ்வழியாகச் சென்ற அரசுப் பேருந்தில் இருந்த ஓட்டுநரும், நடத்துநரும் படுகாயமடைந்த ரிஷப் பந்த்தை மீட்டனர். அத்துடன் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். முதலில் பந்த்க்கு ரூர்க்கி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. ரிஷப் பந்த் தூக்கக் கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ரிஷப் பந்த் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்றும், அவருக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும் ரிஷப் பந்த்திற்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் மூளை மற்றும் தண்டுவடத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும், முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பந்த் மீண்டும் வர வேண்டும் என்றும் அவருக்கு ஆதரவாகவும் ட்விட்டரில் பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாஹீன் ஷா பந்த் உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். விரைவில் மீண்டு வாருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் மலிக், “பந்த்தின் விபத்து குறித்து தற்போதுதான் தெரிய வந்தது. சீக்கிரம் எழுந்து வாருங்கள் சகோதரரே” எனப் பதிவிட்டுள்ளார். அதே போல் முன்னாள் வீரர் ஹசன் அலி, “ரிஷப் பந்த்திற்கு எந்த விதமான பாதிப்பும் இருக்காது என நம்புகிறேன். உங்களுக்கு கடவுள் துணை நின்று சீக்கிரம் குணப்படுத்துவார். உங்களது அதிரடியைக் காண வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
அதேபோல் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் சதாப் கான் முன்னாள் வீரர் முகமது ஹபீசும் பந்த் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் எனக் கூறியுள்ளார்.