இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நான்கு நாள் மாநில மாநாடு தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று (30/09/2022) தொடங்கியது. மாநாட்டின் இரண்டாவது நாளில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா மாநாட்டைத் தொடக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, இன்று (01/10/2022) மாலை 04.00 மணியளவில் திருவனந்தபுரத்தில் உள்ள தாக்கூர் அரங்கத்தில் 'கூட்டாட்சியும், மத்திய, மாநில உறவுகளும்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்துக் கொண்டு பேசினர்.
கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "மாநில சுயாட்சியை, மதச்சார்பின்மையை நிலைநாட்ட நாம் குரல் கொடுக்க வேண்டும். சகோதரத்துவம், சமதர்மம், சமூகநீதியை நிலைநாட்ட நாம் குரல் கொடுக்க வேண்டும். நமது அரசியலமைப்பு சட்டம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பது மாநிலங்களின் கோரிக்கை. ஜிஎஸ்டியால் மாநில நிதி உரிமையும், நீட் தேர்வால் கல்வி உரிமையும் பறிக்கப்படுகிறது என்பதால் எதிர்க்கிறோம். நேரடியாக செய்ய முடியாத அரசியல் தலையீடுகளை சட்டத்தின் போர்வையில் செய்யப் பார்க்கிறார்கள்" என்று குற்றம்சாட்டினார்.
இந்த கூட்டத்தில் கேரள அரசின் செயல்பாடுகளுக்கு எதிரான கண்டன குரல்கள் வலுத்திருந்தன. கேரள அரசின் சில்வர் லைன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, மாநிலத்தை சட்டம்- ஒழுங்கு காவல்துறையின் கண்டனத்திற்குரிய செயல்பாடுகள் பற்றி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.