மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் பழங்குடியின நபர் மீது பா.ஜ.க. நிர்வாகி பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்த வீடியோ சமுக வலைதளங்களில் பரவி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பாஜக நிர்வாகியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.
இதையடுத்து பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா மீது தேசிய பாதுகாப்பு சட்டம், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே பிரவேஷ் சுக்லா அரசு நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வீட்டை கட்டியிருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து சித்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரவேஷ் சுக்லா வீடு புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பிரவேஷ் சுக்லாவும் மத்தியப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ. கேதார்நாத் சுக்லாவும் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கின.
இதனைத் தொடர்ந்து மத்தியப்பிரதேச முதல்வர் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர் எனச் சொல்லப்படுபவரை தன் வீட்டிற்கு அழைத்து அவருக்கு ஆறுதல் தெரிவித்து மரியாதை செய்தார். அப்போது, “அந்த வீடியோவை பார்த்து எனக்கு மிகவும் மனவேதனை ஏற்பட்டது. அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து திடீரென அந்த பாதிக்கப்பட்ட நபர், பிரவேஷ் சுக்லா எங்கள் கிராமத்தின் பண்டிட். அவர் தனது தவறை உணர்ந்துவிட்டார். அதனால், அவரை அரசு விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில், மத்தியப்பிரேதச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் செய்தியாளர்களைச் சந்தித்து, “நாடு முழுவதும் பரவிய இந்த சம்பவத்தால் மத்தியப்பிரேதச மாநிலத்திற்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பழங்குடியின மக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் செய்வதில் மத்தியப்பிரேதச மாநிலம் தான் முதன்மையாக இருக்கிறது. பழங்குடி தொழிலாளர் மீது பிரவேஷ் சுக்லா சிறுநீர் கழித்த சம்பவத்தை பற்றி ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம்” என்று கூறினார்.