இந்தியாவில் ஒமிக்ரான் கரோனா அதிகரித்து வரும் நிலையில், தினசரி கரோனா பாதிப்பும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தங்களது மாநிலத்தில் ஏற்கனவே கரோனா மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்திய மருத்துவ கூட்டமைப்பின் 96-வது தேசிய மாநாட்டை தொடங்கி வைத்த நிதிஷ் குமார், இதுதொடர்பாக கூறியுள்ளதாவது: கரோனாவின் முதல் மற்றும் இரண்டாவது அலைகள் பீகாரை தாக்கியபோது மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அயராது உழைத்ததோடு கரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். அவர்கள் எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவர்கள்.
மூன்றாவது அலை மாநிலத்தில் ஏற்கனவே தொடங்கிவிட்டது. சுகாதாரத்துறை, மருத்துவமனைகளில் உள்ள வசதிகளை மேம்படுத்துவதில் மும்மரமாக உள்ளது. இவ்வாறு நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.