இலங்கையின் அதிபராக அநுர குமார பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்த இலங்கை அதிபர் அநுர குமாரவை நேற்று (15-12-24) மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பிறகு, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் இலங்கை அதிபர் அநுர குமாரவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, அநுர குமார திஸநாயகவுக்கு இன்று (16-12-24) குடியரசுத் தலைவர் மாளிகையில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அநுர குமார திஸநாயக பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அந்த பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்கள் பிரச்சனை, கச்சத்தீவு விவகாரம், இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் ஆகியவற்றை குறித்து பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திஸநாயக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இலங்கை அதிபராக பதவியேற்ற பிறகு, இது எனது வெளிநாட்டு பயணம். எனது முதல் மாநிலப் பயணமாக டெல்லிக்கு வர முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்காகவும், நான் உட்பட முழு தூதுக்குழுவிற்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கும் இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பிரதமர் மோடிக்கும், குடியரசுத் தலைவர் முர்முவுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த வழி வகுக்கும்.
இந்தியாவின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டோம் என்று நான் இந்திய பிரதமரிடம் உறுதியளித்துள்ளேன். இந்தியாவுடனான ஒத்துழைப்பு நிச்சயமாக செழிக்கும், நான் உறுதியளிக்க விரும்புகிறேன். இந்தியாவுடனான ஒத்துழைப்பு நிச்சயமாக செழிக்கும், மேலும் இந்தியாவுக்கான எங்கள் தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்த விரும்புகிறேன். மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் தொல்லையாக மாறியுள்ள மீனவர் பிரச்சினைக்கு நீடித்த மற்றும் நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம். இந்திய மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுருக்குமடி வலையால் மீன்வளம் பாதிக்கப்படும்.
இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்தார். பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதில் இந்தியா மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. அதேபோன்று இலங்கையும் அதே பாதையில் செல்கிறது. அந்த முயற்சிக்கு ஆதரவளிப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார். நிதி நெருக்கடியை இலங்கை சந்தித்த போது இந்தியா உதவி செய்தது” என்று கூறினார்.