கர்நாடகா மாநிலம், பெலகாவி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் துண்டப்பா (24). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரியங்கா(19) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் பிரியங்காவின் பெற்றோருக்குத் தெரியவந்தது. துண்டப்பாவும், பிரியங்காவும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பிரியங்காவின் பெற்றோர் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அந்த பெண் துண்டப்பாவை தொடர்ந்து காதலித்து வந்தார்.
இந்த நிலையில், பெண்ணின் வீட்டார் அவசர அவசரமாக வேறொரு இளைஞரோடு அந்த பெண்ணுக்குத் திருமணம் ஏற்பாடு செய்யத் தொடங்கினர். இதனால், காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, கடந்த 10 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறினர். துண்டப்பாவும், பிரியங்காவும் ஒன்றாகச் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அந்த கிராமம் முழுக்க பரவியது.
இதனால், ஆத்திரமடைந்த பிரியங்காவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், துண்டப்பா வீட்டுக்குச் சென்று கற்களை வீசி தாக்கினர். மேலும், அவர்கள் துண்டப்பாவின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து துவம்சம் செய்தனர். அதன் பின்னர், வீட்டில் இருந்த துண்டப்பாவின் 42 வயது தாயை வெளியே இழுத்துச் சென்று நிர்வாணமாக்கி கிராமத்து தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அதன் பிறகும், ஆத்திரம் அடங்காத அவர்கள், அந்த பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள் அந்த கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்பு, பிரியங்காவின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்த சம்பவம் குறித்துப் பேசிய பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, “காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது” என்று குற்றம் சாட்டினார். இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா பதிலளித்துள்ளார்.
இது குறித்து சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுபோன்ற சம்பவத்தை பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வது வெட்கக்கேடானது. மணிப்பூர் முதல் குஜராத் வரை, உத்தரப் பிரேதசம் முதல் மத்தியப் பிரேதசம் வரை, பா.ஜ.க எங்கு ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக என்.சி.ஆர்.பி தெரிவித்துள்ளது. பா.ஜ.க இயல்பிலேயே பெண்களுக்கு எதிரானது என்பதை இந்த அறிக்கை நிரூபிக்கின்றன.
மாநில பா.ஜ.க.விற்குள் உட்கட்சி பூசல்கள் அக்கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன. கட்சியின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது கட்சியின் மூத்தத் தலைவர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ஜே.பி. நட்டாவுக்கு தைரியம் இருந்தால் இந்த குற்றச்சாட்டுக்களை விசாரிக்க விசாரணைக் குழுவை அனுப்ப வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.