குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வியாழக்கிழமை கர்நாடக மாநிலத்தின் மங்களூரு பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாகினர். இதனையடுத்து துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இருவரின் குடும்பங்களையும் நேரில் சந்திப்பதற்காக மங்களூரு வந்த, கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஆர். பாட்டீல் தலைமையிலான மூத்த காங்கிரஸ் உறுப்பினர்கள் மங்களூரு விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டனர். மேலும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் விமானம், விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால் பயணத்தை ரத்து செய்யும் சூழல் உருவானது.
இது தொடர்பாக மங்களூரு காவல் ஆணையர் அனுப்பியுள்ள நோட்டீஸில், ''அவர் மங்களூருவுக்குள் நுழைந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, " காவல்துறை அறிவிப்பின்படி, என்னால் ரயில், பஸ் அல்லது கார் என எதன்மூலமும் மங்களூருவுக்கு செல்ல முடியாது. மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் ஜனநாயகம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. தற்போதைய சூழல் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது என்றால், எனக்கு மட்டும் ஏன் சூழல் சாதகமாக இருக்காது? நாங்கள் மக்களை தூண்டிவிடப்போவதில்லை. சட்டம் ஒழுங்கு பற்றிய பாடங்களை நாங்கள் பாஜகவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நிலை இல்லை" என தெரிவித்துள்ளார்.