திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை இளைஞர் ஒருவர் 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்கள் வைத்து பின் உடல் பாகங்களை டெல்லி முழுவதும் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த சம்பவம் தொடர்பான 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பையைச் சேர்ந்த அஃப்தப் அமீன் பூனாவாலா அங்குள்ள பிரபல கால் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார். அப்போது அவருடன் பணியாற்றி வந்த ஷ்ரத்தா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்படவே இருவருக்கிடையில் காதல் மலர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் இந்தக் காதல் விவகாரம் ஷ்ரத்தாவின் பெற்றோருக்குத் தெரிய வர, அவர்கள் அஃப்தப் - ஷ்ரத்தாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால் டெல்லிக்குக் குடிபெயர்ந்த இருவரும் மெஹ்ராலி என்ற பகுதியில் தனி வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
இதையடுத்து ஷ்ரத்தா தனது குடும்பத்தினருடனான தொடர்பை முற்றிலுமாக துண்டித்துள்ளார். பலமுறை அவரது பெற்றோர்கள் தொடர்பு கொள்ள நினைத்தும் அவர்களால் முடியாமல் போனது. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தின் மூலம் ஷ்ரத்தா மற்றும் அஃப்தப் இருக்கும் முகவரியை கண்டுபிடித்த அவரது தந்தை விகாஸ் மதன், மெஹ்ராலியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். ஆனால் வீட்டுக்கு பூட்டு போட்டிருந்ததால், சந்தேகமடைந்த விகாஸ் மதன் டெல்லி போலீசில் தனது மகளை காணவில்லை என புகார் கொடுத்தார்.
இதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீசார், அஃப்தப்பை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் ஷ்ரத்தா காதலன் அஃப்தப்பை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி வந்ததாகவும், ஆனால் அஃப்தப்புக்கு இதில் சம்மதமில்லை என்பதாலும் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த மே 18 ஆம் தேதி இதேபோல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஆத்திரமடைந்த அஃப்தப் ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இதனையடுத்து ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி, 18 நாட்கள் பிரிட்ஜில் வைத்து பின்பு டெல்லியில் உள்ள வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளார்.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தயாராகியுள்ளது. பூனாவாலாவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்திருந்த நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் பல்வேறு இடங்களில் வீசப்பட்ட உடல் பாகங்களை கைப்பற்றிய போலீசார், உடல் பாகங்களை உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிவுற்று, அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மிகவும் கூர்மையான ரம்பத்தை பயன்படுத்தி சடலத்தை கூறுபோட்டிருப்பது உறுதியாகி உள்ளது. 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில் 100க்கும் மேற்பட்டவர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.