
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ‘விஸ்வகுரு பாரத்’ என்ற தலைப்பில் பேசினார்.
அதில் அவர் கூறியதாவது, “சுவாமி ராமகிருஷ்ணன் மிஷனில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை நம்மால் மட்டுமே செய்ய முடியும். ஏனென்றால், நாம் இந்துக்கள். காலம் காலமாக நாம் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இந்த நல்லிணக்கத்தை உலகத்துக்கு வழங்க வேண்டுமென்றால், அதற்கான மாதிரியை நாம் உருவாக்க வேண்டும். அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு, புதிய இடங்களில் இதுபோன்ற பிரச்சனைகளை உருவாக்குவதன் மூலம் இந்துக்களின் தலைவர்களாக மாறிவிடலாம் என்று சில பேர் நினைக்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டது, அனைத்து இந்துக்களின் நம்பிக்கைக்குரிய விஷயம். எனவே, அதை அரசியல் உள்நோக்கங்களில் இருந்து புறக்கணிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும், ஒரு புதிய பிரச்சனைகள் உருவாகின்றன. இதை எப்படி அனுமதிக்க முடியும்?. இந்த போக்கு தொடரக்கூடாது. நாம் ஒன்றாக வாழ முடியும் என்பதை இந்தியா காட்ட வேண்டும். சில வெளி குழுக்கள் தங்களுடைய முன்னாள் ஆட்சியை மீட்டெடுக்கும் உறுதியான தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர்.
ஆனால், தற்போது இந்தியா அரசியலமைப்பு சட்டத்தின்படி இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பில், அரசாங்கத்தை வழிநடத்த மக்கள் தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். அயோத்தி ராமர் கோயில் இந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ஆங்கிலேயர்கள் அதை உணர்ந்து இரு சமூகத்தினரிடையே பிளவை உருவாக்கினர். அதனால் தான், பிரிவினைவாதம் தோன்றியது. அதன் விளைவாக தான் பாகிஸ்தான் உருவானது. எல்லோரும் தங்களை இந்தியர்கள் என்று அடையாளப்படுத்தினால் அதன் நோக்கம் என்ன? யார் சிறுபான்மையினர்? யார் பெரும்பான்மையினர்?. இங்கு அனைவரும் சமம். இந்த தேசத்தின் பாரம்பரியம் என்னவென்றால், அனைவரும் அவரவர் வழிப்பாட்டு முறைகளைப் பின்பற்றலாம். சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு இணக்கமாக வாழ்வது மட்டும் தேவையாக இருக்கிறது” என்று கூறினார்.
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதி, உ.பி சம்பல் பகுதியில் உள்ள ஷாஹி ஜமா மசூதி, ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்கா என பல்வேறு மசூதிகள், இந்து கோயில்களை இடித்துக் கட்டப்பட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு அந்த விசாரணை நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.