Skip to main content

‘இந்தியா’; பெயரை விமர்சித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

rss leader Mohan Bhagwat criticized the name of India
கோப்புப்படம்

 

“நமது நாடு பாரதம். ‘இந்தியா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, முடிந்தவரை எல்லா துறைகளிலும் ‘பாரத்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். 

 

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் நேற்று(1.9.2023) நாக்பூர் மற்றும் கவுஹாத்தியில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு பேசினார். நாக்பூரில் நடைபெற்ற நிகழ்வுகளில் பேசிய அவர், “இந்துஸ்தான் ஒரு இந்து ராஷ்டிரா. இது ஒரு உண்மையும் கூட. கருத்தியல் ரீதியாக, அனைத்து பாரதிய மக்களும் இந்துக்களே. அதேபோல இந்துக்கள் அனைவரும் பாரதியர்களே. இன்று பாரதத்தில் இருப்பவர்கள் அனைவரும் இந்து கலாச்சாரம், இந்து முன்னோர்கள் மற்றும் இந்து நிலத்துடன் தொடர்புடையவர்கள். சில மக்கள் இதனை உணர்ந்துள்ளனர். ஆனால் அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சுயநலம் காரணமாக அதனைப் பின்பற்றவில்லை” என்றார். 

 

மேலும், ஆர்.எஸ்.எஸ். சங்கத்தின் சித்தாந்தம் உலகம் முழுவதும் அதிகம் தேடப்படுகிறது. ஏனெனில் இதற்கு மாற்று எதுவும் இல்லை. “எல்லோரும் இதைப் புரிந்து கொண்டுள்ளனர். சிலர் ஒப்புக்கொள்கிறார்கள், சிலர் ஒப்புக்கொள்ளவில்லை. தொடர்ந்து, இப்போது நம் அனைவரின் கூட்டுத் தேவை என்பது ‘சுவதேசி’ குடும்ப விழுமியங்கள் மற்றும் ஒழுக்கத்தில் கவனம் செலுத்துவது ஆகும்” எனத் தெரிவித்தார். 

 

இதையடுத்து கவுஹாத்தியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய மோகன் பகவத், “பண்டைய காலம் தொட்டே பாரதம் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டு வருவதால், ‘இந்தியா’ என அதனை அழைக்காமல் ‘பாரத்’ என்ற வார்த்தையை மக்கள் ஏற்றுக்கொள்ள முனைய வேண்டும். நமது நாட்டின் பெயர் காலம் காலமாக பாரதம் என்றே இருந்துள்ளது. எந்த மொழியாக இருந்தாலும், அதன் பெயர் அப்படியே தான் இருக்கும். நமது நாடு பாரதம். ‘இந்தியா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, முடிந்தவரை எல்லா துறைகளிலும் ‘பாரத்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். அப்போதுதான் மாற்றம் உண்டாகும். நம் நாட்டை ‘பாரதம்’ என்று அழைத்து அதனை மற்றவர்களுக்கும் விளக்க வேண்டும். இந்தியா எல்லோரையும் ஒன்றிணைக்கும் நாடு. இன்று உலகிற்கு இந்தியா தேவைப்படுகிறது. பாரதம் இல்லாமல் உலகம் இயங்காது எனவும் யோகா மூலம் உலகை இணைத்துள்ளோம்” என்றார். 

 

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியக் கல்வி முறையை ஆங்கிலேயர்கள் மாற்றியதை நாம் கடைப்பிடிக்கும் அதே வேளையில், புதிய கல்விக் கொள்கை குழந்தைகளிடையே தேச பக்தி உணர்வை அதிகரிக்கும் முயற்சியாகும்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்