டிக்டாக் தளத்தில் பிரபலமான வட இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் வெளியிட்ட வீடியோ ஆசிட் வீச்சை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக நேற்று சர்ச்சை எழுந்த நிலையில், டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் எதிர்ப்பு அதிகரித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆபாசமான உள்ளடக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் டிக்டாக் செயலியைத் தடைசெய்ய வேண்டும் என நீண்ட காலமாகக் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்தச் சூழலில், பிரபல யூ - ட்யூபரான கரிமினாட்டி அண்மையில் வெளியிட்ட டிக்டாக் ரோஸ்ட் வீடியோ இணையத்தில் வைரலானது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டிக்டாக் பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டார். ஒருகட்டத்தில் இது ரசிகர்களின் சண்டையாகவும் தற்போது மாறியுள்ளது.
இந்தச் சூழலில், 1.34 கோடி ஃபாலோயர்களைக் கொண்ட ஃபைஸல் சித்திக் என்ற டிக்டாக் பிரபலம் நேற்று வெளியிட்ட வீடியோ ஒன்று டிக்டாக் மீதான வெகுஜனத்தின் வெறுப்பை மேலும் அதிகரித்துள்ளது. எனலாம். அந்த நபர் வெளியிட்ட வீடியோவில், ஒரு பெண்ணின் மீது ஆசிட் அடிப்பது போலவும், அதன் பிறகு அந்தப் பெண்ணின் முகம் எப்படிச் சிதைந்துள்ளது என்பதைக் காட்டும் விதமாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த வீடியோ நேற்று முதல் மிகப்பெரிய சர்ச்சையானது. ஆனால், குறிப்பிட்ட அந்தப் பெண்ணின் ஒப்பனைத் திறமையைக் காட்டவே இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக ஃபைஸல் சித்திக் கூறியுள்ளார்.
இருப்பினும் இந்த விஷயம் தற்போது பூதாகரமாக மாறியுள்ளது. ஒருபுறம் மகளிர் அமைப்புகள் இந்த வீடியோ தொடர்பாகப் புகாரளித்து வரும் நிலையில், மற்றொரு புறம், கூகுள் ப்ளேஸ்டோரில் உள்ள டிக்டாக் செயலியின் ரேட்டிங்கைக் குறைத்து தங்களது எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள் இளைஞர்கள். 4.5 ஸ்டார் ரேட்டிங்குடன் இருந்த டிக்டாக் செயலி தற்போது இரண்டே நாட்களில் 2 ஸ்டார் ரேட்டிங் உள்ள செயலியாக மாறியுள்ளது. மேலும் இந்தியாவில் டிக்டாக் செயலியைத் தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.