இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக, பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 'மகா கும்பமேளா' கடந்த ஏப்ரல் 1- ஆம் தேதி தொடங்கியது. இந்த திருவிழாவில் ஹரித்துவார் கங்கை நதிக்கரையில் புனித நீராட, இன்று (12/04/2021) பக்தர்கள், சாமியார்கள் லட்சக்கணக்கில் குவிந்துள்ளனர். கரோனா நெகட்டிவ் சான்றிதழ் உடன் வருபவர்களுக்கு மட்டுமே மகா கும்பமேளாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், புனித நீராடலின் போது பக்தர்கள், சாமியார்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட அரசின் கரோனா தடுப்பு விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. வழக்கமாக மகா கும்பமேளா திருவிழா மூன்று மாதங்கள் நடைபெறும் நிலையில், கரோனா காரணமாக ஒரு மாதம் மட்டுமே திருவிழா நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
இன்று (12/04/2021) கங்கையில் புனித நீராட உகந்த நாள் என்பதால் லட்சக்கணக்கில் பக்தர்கள், சாமியார்கள் ஹரித்துவாரில் குவிந்ததால் கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கக்கூடும் என அச்சத்துடன் உள்ளனர் அப்பகுதி மக்கள். ஏப்ரல் 14, ஏப்ரல் 27 ஆகிய நாட்கள் புனித நீராட உகந்த நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மகா கும்பமேளா காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் காவல்துறையினர் தீவிரப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளனர். இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் இங்கு வந்து கோயிலில் தரிசனம் செய்வர். இதனால், சுற்றுலாத் தொழில் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வரி வருவாய் அம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இமயமலை அடிவாரத்தில் இருக்கும் ஹரித்துவார் நகரத்தில் உள்ள கங்கை நதிக்கரையில் நீராடுவதால் தங்களின் பாவங்கள் விலகி, மோட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.