தேவையின்றி வெளியே சுற்றினால் தனியாக ஒரு அறைக்குள் அடைத்துவைத்து மசக்களி பாடலின் ரீமிக்ஸை தொடர்ந்து ரிபீட் மோடில் கேட்கவைப்போம் என ராஜஸ்தான் போலீஸார் அறிவித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸால் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.34 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5.1 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. மருந்துகள் ஏதும் கண்டறியப்படாத நிலையில், சமூக விலகல் மட்டுமே இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வழியாகப் பார்க்கப்படுகிறது. எனவே இந்தியாவிலும் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை மீறி வெளியே சுற்றும் நபர்களைத் தண்டிக்க போலீஸார் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
யோகா செய்யவைப்பது, உடற்பயிற்சி செய்யவைப்பது, என ஊரடங்கை மீறுபவர்களுக்கு பல்வேறு வினோத தண்டனைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் போலீசார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை அண்மையில் வெளியிட்டனர். அதன்படி, தேவையின்றி வெளியே சுற்றினால், தனியாக ஒரு அறைக்குள் அடைத்துவைத்து மசக்களி பாடலின் ரீமிக்ஸை தொடர்ந்து ரிபீட் மோடில் கேட்கவைப்போம் எனத் தெரிவித்திருந்தனர். அவர்களின் இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பினரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான 'டெல்லி-6' படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இந்தப் பாடலுக்கு இன்றும் பலரின் பிடித்தமான பாடல்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடல் அண்மையில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில், வேறொரு இசையமைப்பாளரின் இசையில் ரீமிக்ஸ் செய்து வெளியிடப்பட்டது. சினிமா ரசிகர்களிடையே பெரும் கிண்டலுக்கு ஆளாகியுள்ள இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட சினிமா துறையினர் பலருமே கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் ராஜஸ்தான் போலீஸின் இந்தக் கிண்டல் கலந்த அறிவிப்பு பலரையும் ரசிக்க வைத்துள்ளது.