வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என ஒரு வருடத்திற்கு மேலாக விவசாயிகள் போராடிவந்த நிலையில், தற்போது வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அதேநேரத்தில், இந்தப் போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர்.
இந்தச் சூழலில் நாடாளுமன்றத்தில், வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் பற்றிய தரவுகள் குறித்தும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "வேளாண் அமைச்சகத்திடம் இந்த விவகாரத்தில் (விவசாயிகள் இறப்பு) எந்தப் பதிவும் இல்லை. எனவே (இழப்பீடு வழங்குவது குறித்து) கேள்வி எழவில்லை" என தெரிவித்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகளும் விவசாயிகளும் கண்டனம் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை (03.12.2021) செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, நரேந்திர சிங் தோமரின் பதிலை விமர்சித்ததோடு, போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் தரவுகள் தங்களிடம் இருப்பதாகவும், அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்போவதாகவும் அறிவித்தார். அதன்படியே இன்று (07.12.2021) ராகுல் காந்தி, போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் தரவுகளை நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, “விவசாயிகள் போராட்டத்தின்போது 700 விவசாயிகள் வீரமரணம் அடைந்தனர் என்பது நாடு அறிந்ததே. விவசாயிகளிடம் பிரதமர் மன்னிப்பு கேட்டு தனது தவறை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்தப் போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை குறித்து வேளாண்துறை அமைச்சரிடம் கேட்கப்பட்டபோது, தன்னிடம் எந்தத் தகவலும் இல்லை என்று கூறியிருந்தார்.
பஞ்சாப் அரசு 400 விவசாயிகளுக்குத் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது. இதில் 152 விவசாயிகளுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. என்னிடம் அந்தப் பட்டியல் உள்ளது, அதை இங்கு தாக்கல் செய்கிறேன். ஹரியானாவைச் சேர்ந்த 70 (இறந்த) விவசாயிகளின் பட்டியலும் எங்களிடம் உள்ளது. எனவே, பிரதமர் மன்னிப்பு கேட்கிறாரென்றால்... உங்களிடம் பெயர்கள் இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள் என்றால்... அவை இங்கே உள்ளன. அவர்களுக்கு இழப்பீடும், வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும், அது அவர்களின் உரிமை.” இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.