புதுச்சேரி - இடுகாடு பணி எம்.பி, எம்.எல்.ஏ ஆய்வு
புதுச்சேரி நகரின் மையப் பகுதியான தென்னஞ்சாலை ரோட்டில் அமைந்துள்ள ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பொது வகுப்பினர் பயன்படுத்தும் உருளையன்பேட்டை இடுகாடு பராமரிப்பு இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது குறித்தும் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் புகார் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து உருளையன்பேட்டை இடுகாட்டை நேரில் சென்று ஆய்வு செய்த திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா, இடுகாட்டை புனரமைக்கவும், அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டியும் எம்.பி., மேம்பாட்டு நிதி ஒதுக்கித் தருமாறு ராதாகிருஷ்ணன் எம்.பி–யிடம் கோரிக்கை வைத்தார். மேலும் இடுகாட்டை நேரில் ஆய்வு செய்யவும் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று இன்று மாலை ராதாகிருஷ்ணன் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் சிவா–வுடன் சென்று உருளையன்பேட்டை இடுகாட்டை ஆய்வு செய்தார்.
அப்போது உருளையன்பேட்டை இடுகாட்டிற்கு குடிநீர், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, மதில்சுவர், சாலை வசதி, உள்பாதைகள் சீரமைத்தல், மண் அடித்தல், மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது என்றும் இதற்காக ரூ. 75 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யவும், அதனடிப்படையில் பணிகள் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் கணேசன், நகராட்சி உதவிப் பொறியாளர் மலைவாசன், இளநிலைப் பொறியாளர் குணசேகரன், ஆய்வாளர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-சுந்தரபாண்டியன்