சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாகனம் வாங்குவதற்கு உதவியாக 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்குவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடக சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகத்தின் (கே.எம்.டி.சி.எல்) திட்டத்தின் கீழ், ஆட்டோ ரிக்ஷா, டாக்ஸி அல்லது சரக்கு வாகனம் வாங்குவதற்கு வாகன மதிப்பில் 50% அல்லது ரூ. 3 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் பயன் பெற சில நிபந்தனைகள் உள்ளன. அவை, 18 முதல் 55 வயதுக்குட்பட்டவராகவும் மற்றும் ஆண்டு வருமானம் ரூ. 4.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள தனிநபர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் கர்நாடகாவில் நிரந்தர குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும் மற்றும் அரசு ஊழியர்களாக இருக்கக்கூடாது. தொடர்ந்து, வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் (கே.எம்.டி.சி.எல்) இன் வேறு எந்தத் திட்டத்திலும் (அறிவுத் திட்டம் தவிர) பயன்பெற்றிருக்கக் கூடாது என்றும் இந்தத் திட்ட வரையறை குறிப்பிடுகிறது.
கர்நாடக சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்ஃப் அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறுகையில், “வாகன ஓட்டுநர் கடைசிவரை ஓட்டுநராக இருக்கக் கூடாது. அவர் ஒரு வாகனத்தின் உரிமையாளராக வேண்டும். அந்த ஓட்டுநர் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நான்கு சக்கர வாகனத்தை வாங்கினால், அதற்கு 3 லட்சம் அரசு மானியம் அளிக்கப்படும். மேலும், நாங்களும் கடன் பெறுவதற்கு உதவுவோம். ஆனால், அவர் நான்கு சக்கர வாகனத்தின் மதிப்பில் 10% முன்பணமாக செலுத்த வேண்டும். உதாரணமாக, காரின் மதிப்பு ரூ.8 லட்சமாக இருந்தால், அவர் ரூ.80,000த்தை முதல் கட்டமாக செலுத்த வேண்டும். நாங்கள் 3 லட்சம் மானியம் அளிப்போம். மீதமுள்ள தொகைக்கு, அவருக்கு வங்கிக் கடன் வழங்குவோம்... இந்தத் திட்டம் முந்தைய சித்தராமையா ஆட்சியில் இருந்தது. பின்னர் பிஜேபி அதை நீக்கிவிட்டது” என அவர் கூறியுள்ளார்.
இதற்கு பாஜக எம்.பி மற்றும் ஒன்றிய அமைச்சர் விமர்சித்து பதிவிட்டுள்ளனர். இந்த திட்டத்தை குறித்து, பா.ஜ.க. எம்.பியும் அமைச்சருமான தேஜஸ்வி சூர்யா ட்விட்டரில், “காங்கிரஸ், அதன் இலவசங்களுக்கு நிதி ஒதுக்க, வழிகாட்டுதல் மதிப்பை 30% அதிகரிக்கிறது. மின் கட்டணத்தை இரட்டிப்பாக்கியுள்ளது. கலால் வரி, பால் விலை, சாலை வரி 5% உயர்த்தப்பட்டு செஸ் வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளது. இப்போது, கர்நாடகாவின் நடுத்தர வர்க்கத்தினர், சிறுபான்மையினருக்காக வடிவமைக்கப்பட்ட ‘மத நோக்கம் கொண்ட திட்டத்திற்கு’ நிதியளிப்பார்கள். இது வாகனங்கள் வாங்க மானியமாக ரூ.3 லட்சம் வழங்குகிறது. இத்திட்டம் வரி செலுத்தும் கடின நடுத்தர உழைப்பாளி குடும்பங்களை குறைத்து மதிப்பிடும் வகையில் வகையில் இருந்தாலும், அதன் முக்கிய வாக்காளர் தளத்தை திருப்திப்படுத்த காங்கிரஸ் எந்த எல்லைக்கும் செல்லும்” என பதிவிட்டிருந்தார்.
இவரைத் தொடர்ந்து, பாஜக முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி ட்விட்டரில், “வெட்கமில்லை என்பதற்கு ஒரு பெயர் இருந்திருந்தால், அது நிச்சயமாக காங்கிரஸ் என்று அழைக்கப்பட்டிருக்கும். கர்நாடகாவில் நடக்கும் இந்த திப்பு சுல்தான் அரசு, தனது முக்கிய வாக்காளர்கள் தளத்தில் பெரும் மழையைப் பொழிந்து அதன் திருப்தி அரசியலைத் தொடர்ந்துள்ளது. வகுப்புவாத காங்கிரஸின் பொய்கள் மற்றும் உத்தரவாதங்களில் விழுந்து அதற்கு வாக்களித்த பெரும்பான்மையினருக்கு இது மிகப்பெரிய அவமானமாகும்” எனப் பதிவிட்டுள்ளார்.