நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் வழக்கம்போல் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து இன்று (19.9.2022) முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்புக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று புதிய நாடாளுமன்றத்தில் முதல் அமர்வு நடைபெற்று வருகிறது.
அதே சமயம் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மாநிலங்களவையில் ஒப்புதலையும் பெற்றிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த மசோதா நிலுவையிலேயே உள்ளது. இதையடுத்து இந்த மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குக் கொண்டு வந்து மகளிர்க்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். அதில் பெண்களுக்கு ஆதாரமளிக்கும் இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அதைத் தொடர்ந்து பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாகப் பேசிய பிரதமர் மோடி, “கடந்த 9 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காகப் பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில், பெண்கள் இட ஒதுக்கீடு மீதான விவாதம் பல நாள்களாக நடந்து வருகிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் பலமுறை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டாலும், அந்த மசோதாவை நிறைவேற்ற போதிய பெரும்பான்மை இல்லாததால் அது நிறைவேறாமல் இருந்தது. ஆனால், இன்றைக்கு இந்த மசோதாவை முன்னெடுத்துச் செல்வதற்காகவும், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும் பணிக்காக கடவுள் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
இந்த மசோதா, மாநில மற்றும் தேசிய அளவில் கொள்கை வகுப்பதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்பதை நோக்கமாகக் கொண்டது. இந்த புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெண்களின் அதிகாரத்திற்கான நுழைவாயில்களைத் திறப்பதற்கான தொடக்கமாகவே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.